டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு, அவசர கோரிக்கை வைக்கும் டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி தொகுதி 1 தேர்வுக்கான வயது வரம்பை 40ஆக உயர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட 6 வகை பணிகளுக்கான முதல் தொகுதி தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு, எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக 37&ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

தமிழக அரசுத் துறைகளில் துணை ஆட்சியர் 18 பேர், காவல் துணை கண்காணிப்பாளர் 19 பேர், வணிகவரித்துறை உதவி ஆணையர் 10 பேர், கூட்டுறவு துணைப் பதிவாளர் 14 பேர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்கள் 7 பேர், மாவட்ட தீயவிப்பு அதிகாரி ஒருவர் என மொத்தம் 6 வகையான  பதவிகளில் 69 பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இப்பணிகளுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இது தான் அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் தொகுதித் தேர்வுகளுக்கான வயது வரம்பை 40-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியும் இதை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதன்பயனாக 2016-ஆம் ஆண்டில்  35 ஆக இருந்த அதிகபட்ச வயது வரம்பை 37-ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இது போதுமானதல்ல.... 40-ஆக உயர்த்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்ட நிலையில்,  புதிய அறிவிக்கையில் வயது வரம்பு திரும்பவும் 37-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை 40-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான கோரிக்கையாகும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துவதைப் போன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் முதல் தொகுதி தேர்வை ஆண்டு தோறும் நடத்தி வந்தால், இப்படி ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது. கடைசியாக 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் தொகுதி தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அத்தேர்வுக்கான முடிவுகள் 40 மாதங்களுக்குப் பிறகு இம்மாதத் தொடக்கத்தில் தான் வெளியிடப்பட்டது. இடைப்பட்ட மூன்றரை ஆண்டுகளில் முதல் தொகுதி தேர்வு ஒரு முறை கூட நடத்தப்படவில்லை. 2016-ஆம் ஆண்டில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகும். அப்போது 36 வயதானவர்களால் அத்தேர்வில் பங்கேற்க முடியவில்லை.

பின்னர் 2017-ஆம் ஆண்டு இறுதியில் வயது வரம்பு 37 ஆக உயர்த்தப்பட்டது. அதனால் 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வை எழுத முடியாதவர்களிடையே, உயர்த்தப்பட்ட வயது வரம்பின்படி  மேலும் ஒரு முறை முதல் தொகுதி தேர்வை எழுதலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அதன்பின் கடந்த மூன்றரை ஆண்டுகளாக முதல் தொகுதி தேர்வு நடத்தப்படவில்லை. அதனால், அவர்களுக்கு  முதல் தொகுதி தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களுக்கு 40 வயது நெருங்குவதால் தேர்வு எழுத முடியாது. இடைப்பட்ட மூன்றரை ஆண்டுகளில்  முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இடையில் தேர்வு நடத்தப்படாததற்கு அவர்கள் காரணமல்ல.... தேர்வாணையம் தான் காரணம் ஆகும். அதற்கு பரிகாரம்  தேடும் வகையிலாவது முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40-ஆக உயர்த்தியாக வேண்டும்.

உண்மையில் 2006-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 14 ஆண்டுகளில் 14 முறை முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7 முறை மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி பார்த்தால் வயது வரம்பு 7 ஆண்டுகள் உயர்த்தி, 44 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வயது வரம்பை அதே 37-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய  சமூக அநீதி ஆகும். இதை தமிழக அரசு சரி செய்தே ஆக வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் முதல் தொகுதி தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகம் ஆகும்.  குஜராத், ஹரியானா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் வயது வரம்பு 45 ஆகவும், ஆந்திராவில் 47 ஆகவும், தெலுங்கானாவில் 49 ஆகவும், கேரளத்தில் சில பணிகளுக்கு 53 ஆகவும் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் வயது வரம்பை உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்து வருவது துரோகம் ஆகும்.

எனவே, தமிழக மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சமூக நீதியை மீண்டும் வழங்கும் வகையில், முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 40 ஆகவும் உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss said fix 40 as age limit of Tnpsc group 1 exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->