மண்மணம் மாறாத திருவிழாக்கள்.. கிராம தெய்வங்களை மறந்துவிட்டீர்களா?! - Seithipunal
Seithipunal


நாம் என்னதான் நகர வாழ்க்கைக்கு பழகியிருந்தாலும் நாம் வாழ்ந்த கிராமங்களை நினைக்கும்போது அந்த மண்வாசனை நம் மனதில் வந்துபோகும். அதிலும் பண்டிகை, விழாக்காலங்கள், வீட்டு விசேஷங்கள் வந்துவிட்டால் இளைஞர்கள் என்றால் மல்லுவேட்டி, வெள்ளை சட்டை சகிதமாய் கிளம்பிவிடுவார்கள். 

மறுபுறம், யுவதிகளோ பாவாடை, தாவணி எனப் பாரம்பரிய உடைகளில் பட்டாம்பூச்சியாய் வட்டமிடுவார்கள். நாம் வளர்ந்த சூழலை விட்டுக்கொடுக்காத குணமும், நம் பண்பாட்டின் மேல் உள்ள பற்றும் பாசமுமே இதற்கு காரணம். 

மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்களில் நாம் கலந்து கொள்ளும் விதத்தினை ஞாபகப்படுத்தும் பதிவுதான் இது...!!

மண்மணக்கும் கிராம தெய்வங்களை மூன்று வகையாக பிரித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்;. அவை...

குடும்ப தெய்வம்,

குலதெய்வம்,

ஊர்த் தெய்வம்.

குலதெய்வம் :

குலதெய்வம் என்பது நமது வம்சாவளியாக வந்த மூதாதையர்களுள் ஒருவர்தான் குலதெய்வமாக இருப்பார். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், மூதாதையரில் ஒருவர், தன் வழித்தோன்றல்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக சண்டையிட்டு வீர மரணமடைந்திருப்பார். இவ்வாறு மரித்தவர்களை நினைவுக்கூறுவதற்காகவும், தங்களின் சந்ததியினரை காத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் உருவான தெய்வ வழிபாடுதான் 'குலதெய்வ வழிபாட்டு முறை". 

இதில், அந்த மூதாதையரை கடவுளாக எண்ணி வணங்கும் அவரின் நெருங்கிய உறவுகள், ரத்தக்கலப்பு உள்ளவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் என தலைமுறை தாண்டிய சொந்தங்கள் பல குடும்பங்களாக பல்கி பெருகியிருக்கும். இந்த குழுவில் இருப்பவர்களே, ஒரு வீட்டுப் பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள், தங்கள் சக பங்காளிகள் வீட்டில் பெண்ணெடுக்கவோ, பெண் கொடுக்கவோ மாட்டார்கள். ஆண்டுக்கு ஒருமுறை, இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, குலதெய்வத்துக்கு சிறப்பு வழிபாடு செய்யும் பழக்கம் பரவலாக இன்றும் காணப்படுகிறது. 

குடும்ப தெய்வம் :

பங்காளிகளாக இருந்து, ஒரே குலதெய்வத்தை வழிபடுபவராக இருந்தாலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு குடும்ப தெய்வமும் இருக்கும். 

ஒவ்வொரு பொங்கலின்போதும், 'குடும்ப தெய்வத்துக்கு" படையல் இடுகின்றனர். மேலும், ஏதேனும் ஓர் இக்கட்டான சூழலில் தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு, சீட்டில் பிரச்சனைகளை எழுதி, 'குலுக்குச் சீட்டு" போட்டு எடுக்கும் முறையும் குடும்ப தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேபோல், ஒவ்வொரு ஊரிலும் குடும்ப தெய்வத்துக்கு செய்யும் சடங்குகள், அக்குடும்பத்தின் தலைவர் முன்னிலையில் நடக்கும்.

ஊர்த் தெய்வம் :

ஊரில் பெரும்பான்மையான மக்களுக்குண்டான பொதுவான தெய்வமே 'ஊர்த் தெய்வம்" என்கின்றனர். பெரும்பாலும் ஊர்த் தெய்வங்கள் உக்கிர தேவதைகளாகவோ அல்லது ஆயுதங்களுடனோ காணப்படுகின்றன.

ஊர்த் தெய்வங்கள் பெரும்பாலும், ஊரின் மையப்பகுதியில் அருள்பாலிக்கின்றன. இப்பகுதியில் முக்கியமான ஊர்க் கூட்டங்கள், திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஊர்த் தெய்வங்களுக்கு பெரும்பாலும் விவசாயம் முடிந்து, அறுவடை முடிந்த காலங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இந்த ஊர்த் தெய்வங்களின் முக்கியமான பரிவார தெய்வங்கள் ஊரின் எல்லைப்பகுதியில் நிலைநிறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு 'எல்லைத் தெய்வங்கள்" என்று பெயர். நம் ஆதித்தமிழர்களின் முக்கியத் தொழிலாக, வேட்டையாடுதல் இருந்திப்பதால், இத்தெய்வங்களுக்கு வேல், அரிவாள் எனும் கூர்தீட்டிய ஆயுதங்கள் கொண்டு சிலைகள் உருவாக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manmanakkum Thiruvizha Kondattangal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->