ரசிகர்களை பலிகடாவாக்கும் உச்ச நடிகர்கள்! கொந்தளிக்கும் நியாயமான குரல்! - Seithipunal
Seithipunal


எனக்கு அந்த நடிகரை ரொம்ப பிடிக்கும். இந்த நடிகரை ரொம்ப பிடிக்கும் என தமிழகத்தில் சினிமா ரசிகர்களின் கூட்டம் மிகவும் அதிகம்.. ரஜினி, கமல், அஜித், விஜய்,சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் உட்பட புதுமுக நடிகர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் உண்டு.. 

ஆனால் இந்த ரசிகர்களை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் எனபதே இங்கே கேள்விக்குறியாக உள்ளது. சரி, விஷயத்திற்கும் வருவோம்.., சமீபத்திய படங்களில் நடிகர்கள் பலர் அரசியல் பேசுகிறார்கள். இந்தியக் குடிமகன் யாவருக்கும் அரசியல் பேச அதிகாரமும், அரசை எதிர்க்க அனுமதியும் உண்டு. ஆனால்.., வெறும் பன்ச் டயலாக்குகளில் ரசிகர்களின் கைத்தட்டலுக்காக அரசை, அரசின் திட்டங்களை விமர்சிப்பது தான் இங்கே விமர்சனத்திற்கு உள்ளாகிறது. 

சில படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும். படமுழுக்க அரசை விமர்சித்திருப்பார்கள். கதையோட்டத்தில் அவைகளை ரசிகர்கள் ரசித்தனர். காரணம் அதன் கதைக்களமே அரசை விமர்சிப்பதுதான், நக்கல் நையாண்டியுடன். இப்படியான கதையோட்டத்துடன் அரசியல்வாதிகளையோ, அரசின் திட்டங்களையோ படம் முழுக்க விமர்சித்த படங்களில் நடித்த நடிகர்கள் யாருமே ரசிகர்களிடையே அரசியல் பேசும் உச்ச நடிகர்களாக இல்லை. சில இயக்குனர் படங்களில் பேசும் அரசியலும் கதையோட்டதுடனே, அதற்கு ஒரு உயிர்ப்பும் இருக்கும்.

ஆனால்.., வெளி நாட்டில் வசிக்கும் கார்பரேட் முதலாளி ஜிஎஸ்டியை, இலவச பொருட்களை விமர்சிப்பதையும், பாதுகாப்பு படை வீரன் இயற்கை விவசாயத்தை பற்றி ஒன்றிரண்டு காட்சிகளில் சொல்வதுதான் ஒட்டவில்லை. அதுவும் பஞ்ச் டயலாக்குகள் ஒன்றிரண்டுடன் அவர்களின் போராட்டம் முடிவடைந்துவிடுகிறது, அதன் பிறகு டூயட் பாடவோ, வில்லனை அடிக்கவோ கிளம்பிவிடுகிறார்கள். 

அதுபோன்ற பக்காவான கமர்ஷியல் படங்களை எடுத்துவிட்டு வந்து, தண்ணீர், 2ஜி, இயற்கை, விவசாயம், இலங்கை தமிழர், நீட், ஜிஎஸ்டி, மெடிக்கல் கொள்ளை, கல்விக்கொள்ளை, ஊழல் என பல விஷயங்களை சமீபத்தில் வந்த அதிக படங்களில் ஓரிரு காட்சிகளில் விமர்சித்தாலும்.., முன்னர் நடித்த படங்களில் விமர்சித்த பிரச்சனைக்குரிய நபர்களுடன் கூட்டு சேர்ந்து நடிக்கத்தானே செய்கிறார்கள். இவர்கள் முந்தைய படத்தில் விமர்சனம் செய்த தொழிலதிபர் தான் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் என்ற அளவில் தான் உள்ளது இந்த உச்ச நடிகர்களின் அரசியல் கொள்கை.. 

நடிகர்கள் அரசியல் பேசவோ, அரசுகளை விமர்சனம் செய்யவோ யாருக்கும் தடையில்லை. பார்ட்டைம் விமர்சனம் செய்வதையும், சம்பந்தமில்லாத கதையில் மேற்சொன்ன பிரச்சினைகளை சொல்லி ஒன்றிரண்டு கைத்தட்டல்களுடன் முடித்து விடுவது தவறு தானே, மக்களின் பிரச்சனைகள் குறித்து நீங்கள் பேசினால் அதற்கான தீர்வை சொல்லாமல் வீண் விளம்பரத்திற்காக பேசி யாரை ஏமாற்றுகிறீர்கள் என்பதே கேள்வி? 

அதே வேளை மற்ற துறைகளை விமர்சிப்பதுடன், அப்படியே அவர்களின் துறைப்பிரச்சினைகளையும் கொஞ்சம் கண்டுக்கொண்டால் நல்லதல்லவா? அதற்கும் தீர்வை கொடுத்தால் நல்லதல்லவா? 

* எந்த நடிகன் லைட்பாய்களின் பிரச்சினையை பேசியிருக்கிறார்?

* தினக்கூலி சிறு குரூப் நடிகர்களின் பேட்டாவைப்பற்றி பேசியிருக்கிறார்?

* செட் போடும்போதோ, சண்டைக்காட்சிகளின்போதோ உயிரிழக்கும் சிறு நடிகர்களின் இன்ஷூரன்ஸ் பற்றி பேசியிருக்கிறார்?

* தமிழ் நாட்டில் தமிழ் நடிகைகளை ஒதுக்குவதைப்பற்றி பேசியிருக்கிறார்?

* சினிமாவில் பெண்களின் மீதான வன்புணர்வுகளை, மீ டூக்களைப்பற்றி பேசியிருக்கிறார்?

* அதிக விலை சினிமா டிக்கெட்டுகளை பற்றி எந்த நடிகன் பேசியிருக்கிறார்?

* நலிந்த நடிகர்கள், தெருக்கூத்து, நாடக நடிகர்களின் வாழ்வை காப்பாற்ற எந்த நடிகன் பேசியிருக்கிறார்?

* கருப்பு பண பரிவர்த்தனைகளை சினிமாவில் எந்த நடிகன் பேசியிருக்கிறார்?

* மிக முக்கியமாய் நல்ல சினிமாக்களுக்கு தியேட்டர் கிடைக்க எந்த நடிகன் பேசியிருக்கிறார்?

* சொந்த ரசிகனுக்கே 2000 ரூபாய்க்கு எண்ட்ரி டிக்கெட்டையும், முதல் நாள் முதல் ஷோவுக்கு ஆயிரமாயிரம் வசூலிப்பதையும் எந்த நடிகன் பேசியிருக்கிறார்?

இன்னும் ஆயிரமாயிரம் பிரச்சினைகளை சினிமாவில் சொல்லிக்கொண்டேப்போகலாம். இவைகளை கண்டுக்கொள்ளாமல் டெம்ப்ரவரி கைத்தட்டலுக்காக பெரிய நடிகரும் மேடைகளில் தோன்றி நடிக்கிறார். அதை ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இவர்கள் பேசும் அரைகுறை தகவலை கேட்டுக்கொண்டு ரசிகர்களும் என்ன ஏது என்று புரிந்து கொள்ளாமலே, நடிகர் மேல் உள்ள நம்பிக்கையில் அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்து பிரச்சனையில் சிக்கி விடுகிறார்கள். 

அரசியல் பேசுங்கள், அரசை கண்டியுங்கள், தவறுகளை சுட்டிக்காட்டுங்க்கள். காரணம் சினிமா ஒரு மாஸ் மீடியா, பலகோடி மக்களுக்கு விரைவில் போய் சேரும். ஆனால் உங்களின் சுய லாபத்திற்காக ரசிகர்களை இறையாக்காதீர் நடிகர்களே! ஒரு பிரச்சனையை பேசினால் அதில் உள்ள லாப நட்டங்களை விளக்கி பேசுங்கள், மாறாக உங்கள் பட விளம்பரத்திற்காக போற போக்கில் பொத்தம் பொதுவாக குறை என அள்ளி வீசிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றாதீர்கள்...

நன்றி : கட்டுரையாளர் கோகுல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media persons condemns part time cinema politicians


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->