திமுகவின் ரகசிய உறவு பற்றி வெளியான தகவல்!! துரைமுருகன் விவகாரத்திற்கு இது தான் காரணமா?!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், " மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசால் பொருளாதாரம் சீரழிந்து, தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கிறார்கள் தமிழக மக்கள். இன்னொருபுறம்... ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் பா.ஜனதாவிடம் அடகு வைத்துவிட்டு, அவர்களுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சிக்கி தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில்தான், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக, ஒரு வரமாக நமக்கு அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல்.

தமிழகத்தின் நலன்களைக் கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என்று, தேர்தல் களத்திலும் கூட்டணி அமைத்து வருகிறார்கள் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும். அம்மாவின் மரணத்திற்குப் பிறகும் அவரைத் தரம் தாழ்ந்து விமர்சித்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளையும் இணைத்து துரோகம் கலந்த ஒரு சுயநலக் கூட்டணியை அமைத்திருக்கிறது அ.தி.மு.க.

மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயங்களில் இவர்கள் போடும் இரட்டைவேடத்தை இவர்களே இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

கிராமப்புற மாணவர்களின் டாக்டராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. சொல்ல ‘அவர்கள் எங்களிடம் அப்படிக் கேட்கவில்லை. நீட் தேர்வு அவசியம் எனும் எங்கள் நிலைப்பாட்டை சொல்லி அவர்களையும் ஏற்கச் செய்வோம்’ என்று பா.ஜனதா சொல்கிறது. எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?

ஐந்து மாவட்ட விவசாயத்தை, இயற்கை வளங்களை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக இருந்த சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம். ‘அந்தத் தீர்ப்பை மதிப்போம்’ என்று சொன்ன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ‘இந்தத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று சொன்ன டாக்டர் ராமதாசையும் மேடையில் வைத்துக் கொண்டு, இந்தத் தீர்ப்புக்கு மாறாக அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

அதைக்கேட்டு ஒரு வார்த்தைகூட மறுப்பு சொல்லவில்லை இருவரும். மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயத்தில் இவர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா..?

இன்னொரு புறம் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டே பா.ஜனதாவுடன் ரகசிய உறவை வைத்துள்ளது தி.மு.க. ஒரு துண்டுச் சீட்டை கைப்பற்றியதாகச் சொல்லி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில் சுமார் 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும் தேர்தல் நடப்பதை அனுமதிப்பது எதைக் காட்டுகிறது? பா.ஜனதாவுடன் ரகசிய உறவு இல்லாமல் எப்படி இது சாத்தியம்?

அந்தக் காங்கிரசாவது நியாயமாக நடக்கிறதா என்றால் இல்லை. டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்போம் என்று கர்நாடகாவில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து நீட் தேர்வு பற்றி பேசும் ராகுல் காந்தி, மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்சனை பற்றி எதுவும் பேசுவதில்லை. தி.மு.க.வும் அதை வேடிக்கை பார்க்கிறது.

அரசியலில் எதுவும் சாத்தியம்... எப்படி வேண்டுமானாலும் கூட்டணிகள் அமைக்கலாம் என்ற அருவெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொள்கையற்ற, முரண்பட்ட, சுயநலமான, மக்கள் விரோத கூட்டணிகளை அமைக்காமல், தமிழக மக்களையும் அம்மாவின் உண்மை விசுவாசிகளையும் மட்டுமே நம்பி களம் காண்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

ஆபத்து அரசியல் நடத்தும் மதவாத பா.ஜனதாவையும், அப்படிப்பட்ட கட்சியுடன் தேர்தல் உறவு இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தலுக்குப் பின்பு ஒட்டிக்கொள்ளும் வகையில் பா.ஜனதாவுடன் ரகசிய உறவைப் பேணிவரும் இரட்டை வேட தி.மு.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் விரோத ஆட்சி ஒழிவது மட்டுமல்ல... சுயநல, சந்தர்ப்பவாத, இரட்டை வேட அரசியலும், கூட்டணி என்ற பெயரில் நடக்கும் அருவெறுக்கத்தக்க பேர அரசியலும் ஒழிக்கப்படும். " என அதில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV dhinakaran says about dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->