மத்தியில் ஆட்சி மொழி தமிழ்? - Seithipunal
Seithipunal


மத்தியிலும், மாநிலத்திலும் தமிழ் ஆட்சி மொழியாகவேண்டும் என்பதுதான் என்னைப்போன்றவர்களின் கனவு ஆகும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழை வீழ்த்தியவர்கள் யார்? என்ற தொடர் கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் எழுதி வருகிறார். இந்நிலையில் மத்தியில் தமிழ் ஆட்சி  மொழி என்ற தலைப்பில் அவர் பதிவிட்டதாவது, 

மத்தியிலும், மாநிலத்திலும் தமிழ் ஆட்சி மொழியாகவேண்டும் என்பதுதான் என கனவு ஆனால், அது இன்னும் கனவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்கும் சட்டம் 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று 1957ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பின் 61 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்றுவரை தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி செய்யவில்லை. ஆட்சிமொழிச் சட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை.

தமிழ்: மத்திய ஆட்சிமொழி

மாநிலத்திலேயே தமிழை ஆட்சி மொழியாக்கும் கனவு இந்த அளவில் இருக்கும்போது, மத்தியில் தமிழை ஆட்சிமொழியாக்குவது எந்த அளவுக்கு கடினமானது என்பதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும். மத்திய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தி வெறியர்களை சமாதானப்படுத்தி, அவர்களின் ஒப்புதலுடன் தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக உயர்த்துவது வானத்தை வில்லாய் வளைப்பதைவிட கடினமான செயலாகும். 1957ஆம் ஆண்டு திமுக முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டபோது, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழை மத்திய ஆட்சிமொழியாக்குவது குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதன்பின், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. தேர்தல் அரசியலில் நீடிக்கிறது. சுமார் 20 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தது. ஆனாலும், மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கும் முயற்சியில் தி.மு.க. வெற்றிபெறவில்லை.

குறைந்தபட்ச பொது செயல்திட்டம்

அதேபோல், 1998ஆம் ஆண்டு மத்தில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அதிமுக, பாமக., மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கட்சிகளின் வலியுறுத்தலை ஏற்று தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மத்தியில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கைக்கு தேசிய அளவிலான கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் 19.11.1998 அன்று தில்லியில் ஆட்சிமொழி மாநாட்டை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இப்போது 22 மொழிகள் உள்ளன. ஆனால், 1998ஆம் ஆண்டு தமிழ் உள்ளிட்ட 18 மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அந்த 18 மொழிகளையும் தேசிய ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பதுதான் மாநாட்டின் நோக்கமாகும்.

8ஆவது அட்டவணை மொழிகள் அனைத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், ஆட்சிமொழி மாநாட்டுக்கான அழைப்பிதழ் அசாமி, ஹிந்தி, உருது, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, குஜராத்தி, கொங்கனி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, நேபாளி, பஞ்சாபி, மணிபூரி, மலையாளம், மராத்தி, வங்க மொழி ஆகிய 18 மொழிகளிலும் அச்சிடப்பட்டிருந்தது. 18 மொழிகளிலும் தனித்தனி அழைப்பிதழ்கள் அச்சிடப்படாமல் ஒரே அழைப்பிதழில் 18 மொழிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அழைப்பிதழ்: வியந்த வாஜ்பாய்

மாநாட்டு அழைப்பிதழை பிரதமர் வாஜ்பாயை, நானும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்தத் தலைவர்களும் சந்தித்து கொடுத்தபோது 18 மொழிகளில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தார். தமிழை ஆட்சிமொழியாக்குவதற்காக செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து என்னுடன் விரிவாக அவர் விவாதித்தார். தமது ஆட்சிக்காலத்திற்குள் தமிழை ஆட்சிமொழியாக்குவதாக உறுதி அளித்தார். அதேபோல், மாநாட்டில் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 13 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மத்தியில் தமிழ் ஆட்சிமொழி என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்கு பதிலாக, தமக்கு எதிரான ஊழல் வழக்குகளை திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கையையே மீண்டும் வலியுறுத்தி வந்தார். அதனால், தமிழ் ஆட்சிமொழி கோரிக்கை நிறைவேறவில்லை. அதுமட்டுமின்றி, வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப்பெற்றதால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது. அதனால், மிகவும் எளிதாக நிறைவேறியிருக்க வேண்டிய தமிழ் ஆட்சி மொழி கனவு சிதைந்தது.

1999ஆம் ஆண்டு திமுக, பா.ம-.க., ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் அமைந்தது. அந்த ஆட்சிக்கு வழிகாட்டுவதற்காக குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அந்தச் செயல்திட்டத்தில் தமிழ் மத்திய ஆட்சிமொழியாக்கப்படும் என்ற வாக்குறுதி சேர்க்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மத்தியில் வாஜ்பாய் அரசு பதவியேற்ற நிலையில், அந்த ஆட்சியிலும் தமிழ் ஆட்சிமொழி கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், 5 மக்களவை உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தத்தை, 12 உறுப்பினர்களைக் கொண்டிருந்த திமுக கொடுக்காததால், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் போனது.

தமிழ்நாட்டில் ஆட்சிமொழி

தமிழ்நாட்டில் 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஒத்த கருத்துடைய பிற அமைப்புகளுடன் இணைந்து நடத்தி வந்தது. 1992ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தமிழர் வாழ்வுரிமை மாநாடு, 1994ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழ் வாழ்வுரிமை மாநாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக 2004ஆம் ஆண்டு திசம்பர் 7ஆம் தேதி தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்திருந்த தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் “தமிழ் வாழ்க! தமிழே ஆள்க!” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த அட்டையை கையில் ஏந்தி நான் முழக்கமிட்டேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ந.சேதுராமன் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தமிழை ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

போராட்டத்திற்கு தலைமையேற்று நான் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

“தாய்மொழியாக தமிழைக் கொண்ட தமிழ் நாட்டில் இப்படி ஒரு போராட்டத்தை நடத்துவது வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆட்சிமொழிச் சட்டம் 1956ஆவது ஆண்டே இயற்றப்பட்டு விட்டது. ஆனால் இன்றளவும் அரசு துறைகள் பலவற்றில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள், ஊழியர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால் தண்டனை வழங்க விதி இல்லாததுதான் இதற்குக் காரணம்.

தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழே ஆட்சிமொழி என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் தமிழ் தெரிந்தவர்களாக இருக்கும்படி செய்ய வேண்டும். தமிழே ஆட்சிமொழி என்ற விதியை மீறுகிறவர்கள்மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிப் பணிகளில் தமிழைப் பயன்படுத்தத் தவறுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் ஆட்சிமொழிச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

தமிழ் மொழியைப் பாதுகாக்க இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்த அணிக்கு வலு சேர்க்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் எங்களோடு சேர வேண்டும். இதற்காக உங்கள் அமைப்பைக் கலைக்க வேண்டியதில்லை.

2005ஆவது ஆண்டுக்குள் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற நிலையை ஏற்படுத்த எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். தமிழைப் பாதுகாக்க அடுத்த ஆண்டு எங்கள் போராட்டம் தீவிரமாக இருக்கும். அது வெளிப்படையாகவும், வெளிப்படை அல்லாமலும் இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தேன்.

ஆனால், தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அப்போதிருந்த அதிமுக அரசு முன்வரவில்லை. தொடர்ந்து ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக, அடுத்தடுத்தப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தள்ளப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Language Dr Ramadoss POst


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->