ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் இன்றுமுதல் வருகைப்பதிவு செய்ய உத்தரவு - Seithipunal
Seithipunal


 

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் வருகைப்பதிவு செய்ய ஆலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றபோது போலீஸாருக்கும், மக்களுக்கும் மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பானதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளதால், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தது.

மேலும், ஆலையைத் திறக்கக் கோரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை என்ற அடிப்படையில் கடந்த மே மாதம் 28-ம் தேதி நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 45 நாட்களாக வேலையில்லாமல் இருந்த ஊழியர்கள் இன்று முதல் வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட ஸ்டைர்லைட் ஆலைநிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து(ஆங்கிலம்) நாளேட்டில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்குள்ள குடியிருப்பில் திங்கள்கிழமை முதல் கையொப்பமிட்டு வருகைபதிவு செய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் செய்தித்தொடர்பாளர் எசக்கியப்பன் கூறுகையில், ஊழியர்கள் நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக வருகைபதிவு செய்கிறோம்.  ஆலையில் உற்பத்தி ஏதும் நடக்காத நிலையிலும் ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட்டு வருகிறது. அடுத்த நடவடிக்கை குறித்து ஆலை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterlite employees asked to report for duty from today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->