உயிரை கொடுத்தாலும் கொடுப்பேன்..! ஒரு பிடி மண்ணை தரமாட்டேன்..!! வீறுகொண்டு எழும் விவசாயிகள்..!!! - Seithipunal
Seithipunal


சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்த அளவீடு பணி 90 சதவீத பணிகளை காவல்துறையின் உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அதிகாரிகள் தங்கள் பணியை முடித்து விட்டனர்.

திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள மேப்பத்துறை மற்றும் சிறுகிளாம்பாடி கிராமத்தில் நிலம், வீடு பறிபோவதால் லட்சுமி என்ற மூதாட்டி, மற்றும் கிராமத்தை சேர்ந்த ஒருசில விவசாயிகள் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கு முயன்றனர். மேலும், தென்னகரத்தில் உள்ள விவசாய நிலங்களில் கறுப்பு கொடி ஏற்றி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்கொலை மிரட்டலை அடுத்து சிறுகிளாம்பாடி மற்றும் தென்னகரத்தில் நிலம் அளவீடும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

தேத்துறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானம் கையகப்படுத்தப்பட்டது. அந்த பள்ளியில் மாதாந்திர தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவர்களுக்கு நடுவில் கற்களை நட்டனர். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே கிராமத்தில், விவசாயி பெருமாள் என்பவரின் மனைவி அஞ்சலை தனது நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் புரண்டு கத்தி கதறி அழுதார்.

இந்த விடயம் பற்றி அம்மாவட்ட மக்கள் தெரிவிக்கையில், ''விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்து பசுமை சாலையை அமைக்க தீவிரம் காட்டுகின்றனர். எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த மறுக்கின்றனர். போலீசை வைத்து அடக்குமுறையோடும், அதிகாரத்துடனும் ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். எங்கள் உயிரே போனாலும், எங்கள் நிலத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம்''. என்று தெரிவித்துவருகின்றனர்.

பசுமை வழி சாலையும்.. அதன் எதிர்ப்பும்..

சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் கடும் பாதிப்புள்ளாகிறது. இதில் ஆயிரம் ஹெக்டேர் அரசு நிலம் வழியாகவும், 4 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வழியாகவும் இந்த பாதை அமைகிறது. மேலும், சேர்வராயன், கல்வராயன் மலை உள்பட 8 மலைகள் வழியாக,120 ஹெக்டேர் வனப்பகுதியும் வழியாகவும் இந்த சாலை அமைகிறது. 

23 பெரிய பாலங்களும், 156 சிறு பாலங்களும், 9 மேம்பாலங்களும், பாலங்களுக்கு கீழ் 22 வாகன கீழ் வழிச்சாலையும், 2 பாலங்களுக்கு கீழ் இன்னொரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. வனப் பகுதியில் 3 சுரங்கப் பாதைகளும், 8 சுங்க சாவடிகளும், லாரிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. 

இதனால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் பசுமை வழிச்சாலை பற்றி பேசினால் கூட தமிழக அரசு கைது நடவடிக்கையை எடுத்துவருகிறது. தமிழக அரசின் இந்த அராஜக போக்கை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைளை வெளியிட்டு வருகின்றனர். 

இருப்பினும், சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணியை வருவாய் துறையினர் சர்வாதிகாரத்துடன் செய்துவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பசுமை சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 20 இலட்சம் பொது மக்கள், விவசாயிகள் தங்கள் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வரும் மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NOT ALLOWED TAKE OVER MY PROPERTY FORMERS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->