வள்ளி திருமண நாடக மேடையிலேயே உயிர் விட்ட சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ்..!! - Seithipunal
Seithipunal


அன்று சென்னை வால் டாக்ஸ் ரோட்டிலே, உள்ள ராயல் தியேட்டர் என்ற அரங்கில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டர் என்றதும், சினிமா படம் என்று நினைத்து விட வேண்டாம். அங்கு நடைபெற இருந்தது, ஒரு நாடகம்.

1941-ஆம் ஆண்டின் துவக்கம், ஜனவரி 1-ஆம் தேதி, அங்கு நடைபெற்றது, வள்ளி திருமணம் என்றொரு புராண நாடகம். இந்த நாடகம் திருவிழாவில் போடுவது போல் இருக்காது. அதன் இடையே. பாடுபவரின் பாடலும், அவர் குரலும், இடையிடையே பேசும் வசனங்களுக்கு, எல்லாம், மக்களிடையே மிகுந்த வரவேற்பு.

எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். காரணம், அந்த வள்ளி திருமணம் நாடகத்தில் நடித்தவர், விஸ்வநாததாஸ் என்பவர். இயற்கையிலேயே, அவருக்கு நல்ல குரல் வளம். அந்தப் புராண நாடகத்தின் இடையே, சம்பந்தமே இல்லாமல், ஆங்கிலேயர்களை, சிலேடையாகவும், சமயங்களில் நேரடியாகவும் தாக்கி வசனம் பேசுவார்.

அவர் பேசும் அந்த வசனங்களுக்காகவே, மக்கள் கூட்டம் கூடியது. வள்ளி திருமண நாடகத்தில், முருகனாக நடித்தார். மயில் மேல், அமர்ந்து கொண்டு, “கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி…” என்று பாடினார்.

அவர் பாடலைத் தணிக்கை செய்யவும், அவர் பாட தடை விதிக்கவும், ஆங்கிலேய போலீஸ் அதிகாரிகள் காத்திருந்தார்கள். நாடகம் முடியட்டும், அவரைக் கைது செய்யலாம், என்றிருந்தார்கள்.  முருகன் வேடமிட்ட தாஸ், ஆவேசமாக, அரக்கர்களை ஏசுவதைப் போல, ஆங்கிலேயர்களை வசை பாட ஆரம்பித்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது.

அடுத்த நிமிடம், ஆரவாரம் அடங்கியது. முருகன் அப்படியே மயில் மேல் சிலையாக இருந்தார். ஆம்! அந்த நாடகத்திலேயே, அவர் உயிரும் பிரிந்து விட்டது. “என் உயிர் நாடக மேடையிலேயே போக வேண்டும்” என்ற அவரது விருப்பத்தை கடவுள் நிறைவேற்றி வைத்து விட்டார்.

அந்த தியாகி விஸ்வநாததாஸ், 1886- ஜுன் 16-ஆம் தேதி, சிவகாசியில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே, நாடகம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வத்தைக் கண்டு, இவரை நாடகத்தில், அறிமுகப் படுத்தியவர், சங்கரதாஸ் சுவாமிகள்.

நல்ல குரல் வளம் இருந்ததால், பெண்ணாகவும், ராஜபாட்டையாகவும் நடித்தார். காலம் இப்படியே சென்று கொண்டிருக்க, துாத்துக்குடிக்கு 1911-ஆம் ஆண்டு, காந்தி  வந்த போது, அவரைச் சந்தித்தார்.

அதன் பின், அவர் எண்ணம் முழுவதும், தேச விடுதலைக்காக, தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும், என்று தான், அவர் மனம் எண்ணியது. அதன்படியே, அவர் நடத்தும் நாடகங்களில், முருகன் வேடமிட்டு, சுதந்திர வேள்வியைத் துாண்டும் பாடல்களைப் பாடுவார்.

போலீசார் அவரைக் கைது செய்ய வரும் போது, இப்போது முருகனைக் கைது செய்ய முடியாது, நாடகம் முடியட்டும், என்பார். பின், நாடகம் முடியும் போது, மறைந்து விடுவார்.  இதனால், பல முறை சிறை சென்றார். ஆனாலும், அது அவரது சுதந்திர வேட்கையை அதிகரித்ததே ஒழிய குறைக்கவில்லை.

சண்முகானந்தம் குரூப், என்ற நாடக கம்பெனியை நிறுவி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகம் போட்டார். இறுதியில், சென்னையில், 1941-ஜனவரி 1-ஆம் தேதி, நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது, அவர் உயிர் பிரிந்தது. அவர் போட்ட வேடத்துடனே, அவரை இடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

இந்த தேசத்திற்காக, கடவுள் பலரைப் படைத்திருக்கிறார். அவர்களில், மதுரகவி விஸ்வநாததாஸ், கடவுள் வரம் பெற்றவர்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN FREEDOM FIGHTER LIFE HISTORY


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->