கோவை மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய குழந்தைக்கு எச்ஐவி!! கதறியழுத பெற்றோர்கள்!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 9 வருடமாக திருப்பூரில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அந்த வாலிபர் தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த இரு குழந்தைகளும் எடை குறைவாக இருந்ததால் 32 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு பெண் குழந்தைக்கு சளி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. அதனால் அவருடைய பெற்றோர்கள் பதறி அடித்து கொண்டு  உடனே குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது என கூறி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்பு கோவை அரசு மருத்துவமணையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் குழந்தைக்கு ரத்தம் இல்லாததால் ரத்தம் ஏற்றி உள்ளனர்.

தற்போது அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது கேட்டு ஆத்திரம் அடைந்த குழந்தையின் தந்தை கூறியது:

'எனது பெண் குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி தான் கோவை அரசு மருத்துவமணையில் ரத்தம் ஏற்றினார்கள். அப்போது நான் மட்டும் தான் குழந்தையுடன் இருந்தேன். எனது மனைவி வெளியே சென்று இருந்தார்.

அந்த சமயத்தில் ரத்தம் ஏற்றிய போது ஒரு மருத்துவர் வெளியே சென்று விட்டார். அதன்பிபு அங்கு வந்த மற்றொரு மருத்துவர் ரத்த பாட்டிலை எடுத்து விட்டார்.

இதை குறித்து மருத்துவரிடம், கேட்ட போது இது வயதானவர்களுக்கு உரிய ரத்தம். அதனை மாற்றி ஏற்றி விட்டனர் என கூறினார். குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்தனர்.

குழந்தையின் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறினீர்கள். ஆனால் 3 நாளில் டிஸ்சார்ஜ் செய்து விட்டீர்களே என நான் கேட்டேன். பின்னர் நாங்கள் ஒரு வாரம் புறநோயாளியாக குழந்தைக்கு சிகிச்சை பெற்றோம்.

கடந்த 3 மாதத்துக்கு முன் குழந்தையின் காது, உடம்பில் கட்டி வந்தது. நாங்களும் அம்மை நோய் தாக்கி இருக்கலாம் என நினைத்து மருந்து கொடுத்து வந்தோம். ஆனால் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குழந்தையை கோவை அரசு மருத்துவமணையில் அனுமதித்தோம்.

குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்தமருத்துவர்கள் எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, பின்னர் எங்கள் 3 பேருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்தோம்.

ஆனால் பரிசோதனையில் எங்களுக்கு தொற்று இல்லை என தெரிவித்தனர். ஆனால் அதற்கான சான்றிதழை கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குழந்தையின் பெற்றோர்கள், நாங்கள் 3 பேரும் தனித்தனியாக பரிசோதனை செய்தோம்.

அதிலும் எங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. "எங்களுக்கு இல்லாதபோது குழந்தைக்கு மட்டும் இந்த தொற்று எப்படி ஏற்பட்டது?"

குழந்தை பிறந்த திருச்சி அரசு மருத்துவமனை தவிர மற்றபடி நாங்கள் கோவை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை அளித்துள்ளோம். அதன் பிறகு குழந்தைக்கு அங்கன் வாடி மையத்தில் தடுப்பூசி மட்டும் தான் போட்டு உள்ளோம்.

இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது புகாரை வாங்க மறுத்து விட்டனர். அதன் பிறகு மனித உரிமை அமைப்பு, மக்கள் கண்காணிப்பகத்தை நாடி சென்றோம்.

குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க வேண்டும்' என குழந்தையின் தந்தை கூறினார்.

பேட்டியின் போது மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசீர் வாதம், நிக்கோலஸ், வக்கீல் சாரதி ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியது:-

'குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமணையில் ரத்தம் ஏற்றப்பட்டது உண்மைதான். ஆனால் ரத்த சிகப்பணு மட்டுமே ஏற்றப்பட்டது. இதனால் எச்.ஐ.வி. பரவ வாய்ப்பு இல்லை'.

அப்போது குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட ஆவணங்களை சரி பார்த்த போது எந்தவித தொற்றும் இல்லை என்பது தெரிய வந்தது.

தற்போது கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தான் குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

குழந்தைக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பதை விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும். இது தொடர்பாக மனித உரிமை அமைப்பு, மக்கள் கண்காணிப்பகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HIV affect in 2 year baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->