8 பேரை கொன்ற பணிமனை விபத்து: 2005-ம் ஆண்டே பாமக எச்சரித்தும் மூடி மறைத்த அதிகாரிகள்..கொலை வழக்கு பதிவு செய்க - டாக்டர் ராமதாஸ்.., - Seithipunal
Seithipunal


8 பேரை கொன்ற பணிமனை விபத்து. 2005-ம் ஆண்டே பாமக எச்சரித்தும் மூடி மறைத்த அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த 8 ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறையாறு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை விபத்தில் 8 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் உயிரிழந்தது தவிர, மேலும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொறையாறு பணிமனையில் ஏற்பட்டதை விபத்து என்று கூற முடியாது... திட்டமிட்ட படுகொலை என்று தான் கூற வேண்டும். ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். 

விபத்துக்கு உள்ளான பணிமனைக் கட்டிடம் 1943-ஆம் ஆண்டு சக்தி விலாஸ் டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டது ஆகும். அதன்பின் தனியார் போக்குவரத்துக் கழகங்கள் அரசுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கட்டிடத்தில் அரசு பணிமனை செயல்பட்டு வந்தது. இக்கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் ஆனதாலும், சாலையோரத்தில் அமைந்திருந்ததால் வாகனங்கள் செல்லும் போது ஏற்பட்ட தொடர் அதிர்வுகளாலும் பலவீனமடைந்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இக்கட்டிடம் பலவீனமடைந்ததற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிந்தன.

பலவீனமடைந்திருந்த பணிமனைக் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 8.12.2005 அன்று பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் பொறையார் பணிமனை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். அதன்பின்னர் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து போக்குவரத்துக் கழக பொறியாளர்களைக் கொண்டே பணிமனைக் கட்டிடத்தை ஆய்வு செய்த நிர்வாகம் கட்டிடம் மிகவும் வலிமையாக இருப்பதாகவும், அதனால் ஆபத்து இல்லை என்றும் சான்றிதழ் பெற்றது.

அவ்வாறு சான்றளிக்கப்பட்ட பணிமனைக் கட்டிடம் தான் இப்போது இடிந்து விழுந்து 8 அப்பாவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது. பணிமனைக் கட்டிடம் பலவீனமடைந்திருப்பதாக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், அதை பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் தான் கட்டிடத்தின் உறுதித் தன்மையை மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாகமோ தங்களின் பொறியாளர்களைக் கொண்டே ஆய்வு செய்ததாகக் கணக்குக் காட்டி, கட்டிடத்தின் பலவீனத்தை மூடி மறைத்தது. 

இதன் பின்னணியில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் தான் இந்தக் கொடிய விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணம் ஆவர். அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 304-ஆவது பிரிவின்படி உள்நோக்கமின்றி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு தார்மீகப் பெறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு பதவி விலக வேண்டும்.

பணி செய்வதற்காக பணிமனைக்கு வந்த ஓட்டுனர்களும், நடத்துனர்களும் அடுத்த நாள் காலையில் இல்லம் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு பதில் அவர்களின் உயிரற்ற உடல்கள் வீடு திரும்புவது மிகவும் கொடுமையானது. இதனால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படும் வேதனையும், இழப்பும் அளவிட முடியாதது ஆகும். வருவாய் ஈட்டும் ஒற்றை ஆதாரமாகத் திகழ்ந்த பணியாளர்கள் இறந்ததால் அவர்களின் குடும்பங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு தவிக்கின்றன. அவர்களின் குடும்பங்களுக்கு வழக்கமான பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்களுடன் ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கவும் ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

பொறையாரில் இடிந்த கட்டிடங்களைப் போலத் தான் தமிழகத்தில் பெரும்பாலான அரசுக் கட்டிடங்கள் உள்ளன. இத்தகைய விபத்துக்களைத் தடுக்க, பொறியியல் வல்லுனர் குழுக்களை அமைத்து தமிழகம் முழுவதும் உள்ள பழைய அரசு கட்டிடங்களை தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss statement about TNSTC building collapse


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->