பெட்ரோல் குண்டுகளை வீசி மிகப்பெரிய கலவரத்தை தூண்ட நடந்த சதித்திட்டம் முறியடிப்பு...தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ்.., - Seithipunal
Seithipunal


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி மிகப்பெரியக் கலவரத்தைத் தூண்ட நடந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருப்பது பெரும் நிம்மதி அளிக்கிறது. சமூக விரோத சக்திகளின் சதித்திட்டத்தை சரியான நேரத்தில் அறிந்து அதை  முறியடித்ததுடன், அதில் சம்பந்தப்பட்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

நல்லம்பள்ளியைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், ஊராட்சித் தலைவருமான மாணிக்கம் என்பவரின் சகோதரர் மகள் பிரியங்காவை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ராஜ்குமார் என்பவர் கடத்திச் சென்றது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். 

இளம் பெண் கடத்தப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தைப் பயன்படுத்தி சமூகவிரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் பிரியங்கா குடும்பத்தினர், அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில் 61 பெட்ரோல் குண்டுகளும், மற்ற ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதுதவிர 150-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகளை தயாரிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் குவித்து வைத்திருந்த பாட்டில்கள், பெட்ரோல் மற்றும் திரி உள்ளிட்ட மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான சீனி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாவட்டத் துணை செயலாளராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

பிரியங்காவின் உறவினர்கள் வசிக்கும் பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசியோ, அல்லது தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசி பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு, அதை அடிப்படையாக வைத்தோ கலவரத்தைத் தூண்டுவது தான் பிடிபட்ட கும்பலின் திட்டம் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சமூக விரோத வன்முறை கும்பல் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களின் தூண்டுதலில் தான் கலவரத்திற்கு ஏற்பாடுகள் நடந்ததாகவும் உள்ளூரில் பேசப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த வன்முறைகளும் இத்தகைய பின்னணி கொண்டவை தான். தங்களுக்குத் தாங்களே வன்முறை நடத்திக் கொண்டு பழியை மற்றவர்கள் மீது போட்டு, அதன் மூலம் அரசியல் லாபமும், பொருளாதார லாபமும் அடைவதே சில சமூகவிரோத சக்திகளின் வாடிக்கையாக உள்ளது. கடந்த காலங்களில் அவர்கள் தங்களின் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்த நிலையில், இப்போது காவல்துறையின் விழிப்பான நடவடிக்கையால் கலவரம் தடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டுகளை தயாரித்து மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம் தீட்டியவர்கள் மட்டும் தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இத்தகைய சதித்திட்டத்திற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் இன்னும் வெளியில் தான் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் மீண்டும் இதே போன்ற கலவர சதிகள் அரங்கேற்றப்படும் ஆபத்துகள் அதிகமாக உள்ளன.

எனவே, நல்லம்பள்ளி பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தவும், கலவரம் செய்யவும் தூண்டியவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களிலும் இத்தகைய செயல்களில் எவரும் ஈடுபடாத வகையில் கண்காணிக்க வேண்டும். இத்தகைய வன்முறை மற்றும் கலவரத்தைத் தூண்டும் கும்பல்கள் தருமபுரி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் செயல்படுகின்றன என்பது உளவுப்பிரிவுக்கு தெரியும் என்பதால் அவர்கள் மீதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் செல்லும் வழியில் அவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதை தடுக்க பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்துதல், மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss statement about petrol bomb conspiracy foiled


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->