டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: அரசு அலட்சியம் காட்டினால் விளைவு மோசமாகும் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.., - Seithipunal
Seithipunal


டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல். அரசு அலட்சியம் காட்டினால் விளைவு மோசமாகும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வரும் நிலையில், அடுத்ததாக பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வழக்கம் போலவே, பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினால் மக்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நோய்க் கண்காணிப்புத் திட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள இதுதொடர்பான புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 15-ஆம் தேதி வரை 3244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மராட்டியம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால் இதைக் கட்டுப்படுத்திவிட முடியும்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 3244 பேரில் 2994 பேருக்கு இப்பாதிப்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏற்பட்டதாகும். அந்த காலத்தில் இந்த காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்திருந்தனர். பன்றிக்காய்ச்சல் நோய் குளிர்காலத்தில் மட்டும் பரவும் தன்மை கொண்டதாகும். மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான வெப்பநிலை காரணமாக கட்டுப்பாட்டில் இருந்த பன்றிக் காய்ச்சல் இப்போது மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரு பெண்மணி, கிருஷ்ணகிரியில் ஒருவர் என கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர். 

பன்றிக் காய்ச்சல் நோய் அச்சுறுத்தும் அளவுக்கு இப்போது தீவிரமடையவில்லை என்றாலும் கூட, வெப்பநிலை குறையும் போது இது வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சல் கொசு மூலம் பரவக் கூடியது என்றால், பன்றிக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவக்கூடியது ஆகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் மிகவும் தீவிரமாக பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. மேற்கு மாநில அனுபவங்கள் அதை உணர்த்துகின்றன. உதாரணமாக கடந்த ஜூலை மாத நிலவரப்படி தமிழகம் தான் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது. அப்போது மராட்டிய மாநிலத்தில்  2738 பேர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 300 பேர் உயிரிழந்திருந்தனர். 

ஆனால், இப்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5881 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 669 ஆகவும் உயர்ந்துள்ளது. இதைவிட மோசமாக குஜராத் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை   7658 ஆகவும், உயிரிழப்புகள் 431 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த பாதிப்பு - உயிரிழப்புகளில் 60% கடந்த இரு மாதங்களில் ஏற்பட்டது என்பதிலிருந்தே நோய் பரவலின் வேகத்தை அறிந்து கொள்ள முடியும்.

பன்றிக் காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கு முன்பாக பன்றிக்காய்ச்சல் நோய் தமிழகத்தில் பரவுவதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு முறைகள், சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினியால் கழுவுதல், கணினிகளில் பணி செய்பவர்கள் மூக்கு, வாய், கண்களில் அழுக்கான கைகளை வைப்பதை தவிர்த்தல், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பன்றிக் காய்ச்சல் நோயிலிருந்து மனிதர்கள் தற்காத்துக் கொள்ளலாம். 

ஆண்டுக்கொரு முறை தடுப்பூசியும் போடலாம். பன்றிக்காய்ச்சல் நோயை கண்டறிவதற்கான சோதனையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ள வகை செய்யப்பட வேண்டும். அத்துடன் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமை வார்டுகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அமைக்கப்படுவதுடன், காய்ச்சலை குணப்படுத்துவதற்கான டாமி ஃப்ளு மாத்திரைகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும்.

கேரளத்தில் டெங்குக் காய்ச்சல் தாக்கத் தொடங்கிய போது அம்மாநில அரசு விழிப்புடன் செயல்பட்டதால் அங்கு நோய் பரவலும், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்பட்டதால் தான் நிலைமை மோசமானது. பன்றிக்காய்ச்சல் விஷயத்திலும் அதேபோல் உறங்கி விடாமல் உடனடியாக விழித்துக் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss statement about swine flue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->