சிறுக சரிகிறது ஆட்சி..? வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதிக்குள் நடக்க போவதை பாருங்கள்.. ஸ்டாலின் எடுக்க போகும் சக்கரவியூகம்..? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு பற்றி மறைமுகமாக கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

`அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சுயமரியாதையையும், சமூகநீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூறாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறடிகத்துக் கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது. தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பி வந்து வாஞ்சையுடன் ஊட்டுவதுபோல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் சிறகடித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் தரங்கெட்டதோர் ஆட்சி, மாநிலத்தின் நலன்களைச் சிதைத்து, சீரழித்து வருகிறது. அந்தக் கேடுகெட்ட ஆட்சியை ஏன் கீழே இறக்காமல் இருக்கிறீர்கள் என்று தி.மு.கழகத்தைப் பார்த்துப் பொதுமக்கள் நாள்தோறும் கேள்விக்கணை தொடுத்தவண்ணம் இருக்கிறார்கள்.

தமிழகத்தை மாற்றக்கூடிய வலிமையும், தகுதியும் தி.மு.கழகத்துக்கு மட்டுமே உண்டு என்கிற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைதான் இந்தக் கேள்விக்குக் காரணம். ஊடகங்களின் கருத்துகளும், கணிப்புகளும் கழகத்தை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. "எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே" என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் - கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அடிக்கடி நேரில் வந்து கழக நிர்வாகிகளையும், தோழர்களையும் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பை உங்களில் ஒருவனான நான், கழகத்தின் செயல்தலைவர் என்ற முறையில் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தமுறை கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உங்களை அழைத்து உரையாடவும், அதன்வழியே கழகத்தை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.


வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி இந்தக் கள ஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள கள ஆய்வில், கழகத்தின் ஆணிவேருக்கு முறையாக நீர்பாய்ச்சி, உரமூட்டுவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன். திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டிய கடமை தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சி செயலாளர்கள், பேரூர்க் கழகச் செயலாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கழக துணை அமைப்புகளுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் சந்திப்பு நடைபெற்ற பிறகு, ஒன்றிய - நகர - பகுதி கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறவிருக்கிறது.


பகையுணர்ச்சி களைந்து, ஆரோக்கியமான போட்டியுணர்ச்சி மிகுந்து, வாளும், கேடயமும் தாங்கும் தகுதிமிக்க படைவீரர்களாக நடைபோடுவதற்கான பார்வையையும், பலத்தையும் பெறுவதற்கான நல்வாய்ப்பாக இந்த சந்திப்பு அமையவேண்டும் என எதிர்பார்த்து, உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன்.

மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளிடமிருந்து தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய போராட்டக் களங்கள் நிரம்ப உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற - சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து வரிசையாக வரவிருக்கின்றன. போராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக கழகத்தின் கள ஆய்வு அமையட்டும். காத்திருக்கிறேன் உங்கள் அனைவரையும் காண... உங்களில் ஒருவனாக!' என்று குறிப்பிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK's MK Stalin plans to meet peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->