கடலூர், நாகை மாவட்டங்களை அழிக்க தயாரான நிறுவனம் திவாலானது? திட்டத்தையே கைவிட வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோக் கெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தை முன்னின்று செயல்படுத்த ஒப்புக்கொண்டிருந்த நாகார்ஜுனா குழும நிறுவனங்களில் ஒன்றான நாகார்ஜுனா கடலூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் திவாலாகி விட்டது. ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சி வருந்தத்தக்கது  என்றாலும், அதனால் உழவுத்தொழில் காக்கப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையானது,  
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில்  சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதற்காக அந்த கிராமங்களில் உள்ள 22,938 ஹெக்டேர், அதாவது 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் தீர்மானிக்கப்பட்டது. நாகார்ஜுனா குழும நிறுவனங்களில் ஒன்றான கடலூர் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைமையில் பல நிறுவனங்கள் ரூ.92,000 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், எண்ணெய்க் கிடங்குகளையும் அமைப்பது தான் திட்டத்தின் நோக்கமாகும்.

Image result for petro chemical

பெட்ரோலிய மண்டலம் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகை மாவட்டங்களின் பெரும்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மக்கள் வாழத்தகுதியற்ற நிலை ஏற்பட்டு விடும் என்பதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5&ஆம் தேதி சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசினேன். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க.  முன்னெடுக்கும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் அத்திட்டத்தை செயல்படுத்தவிருந்த கடலூர் நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனம் திவாலாகிவிட்டது.

நாகார்ஜுனா நிறுவனம் மொத்தம் ரூ.8,800 கோடி அளவுக்கு கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் திவால் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தை ரூ.1450 கோடிக்கு ஏலம் விட பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த அளவுக்கு விலை கொடுக்க யாரும் தயாராக இல்லை. அதனால் அந்த நிறுவனத்தின் சொத்துக்களை தனித்தனியாக விற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எது எப்படியிருந்தாலும், கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியப் பொருட்கள் முதலீட்டு மண்டலத்தை அமைக்க இருந்த  கடலூர் நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனம் இப்போது இல்லை. பெட்ரோலிய மண்டலம் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், நாகார்ஜுனா நிறுவனத்துக்கும் இடையில் தான் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருந்தன. இப்போது சம்பந்தப்பட்ட நிறுவனமே இல்லை என்பதால் அந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டன என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அது தான் வழக்கமான நடைமுறையாகும்.

Related image

இந்த நடைமுறையைப் பின்பற்றி பெட்ரோலிய மண்டலத் திட்டம் குறித்த ஒப்பந்தங்கள் காலாவதியாகி விட்டதாகவும், அந்தத் திட்டமே கைவிடப்படுவதாகவும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மாறாக, நாகார்ஜுனா குழுமத்தின் பிற நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வேறு நிறுவனங்கள் மூலமாகவோ  இந்த நாசகாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்யக்கூடாது. அவ்வாறு ஏதேனும் முயற்சிகளில் பினாமி அரசு ஈடுபட்டால் அதற்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்.

பெட்ரோலிய மண்டலம் அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டபகுதிகள் அனைத்தும் கொள்ளிடம் மற்றும் வங்கக்கடலை ஒட்டிவையாகும். இப்பகுதிகளில் ஏற்கனவே கடல் நீர் உள்ளே புகுந்து விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் கிட்டத்தட்ட அழித்து விட்டது. கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தில் கலந்ததால் அங்கு விளையும் இளநீரிலும், நிலத்தடி நீரைக் குடிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் டையாக்சின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பரங்கிப்பேட்டையில் சாயத் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் அங்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 5 அனல் மின்நிலையங்கள் உள்ளதால் சுற்றுச்சூழலும், காற்றும் மோசமாக மாசுபட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெட்ரோக்கெமிக்கல் திட்டமும் செயல்படுத்தப்பட்டால் மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும். இதை அவர்களால் தாங்க முடியாது.

Image result for agri land

எனவே, கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதற்காக அப்பகுதிகளில் உள்ள 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும்  திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமின்றி, திவாலானதாக அறிவிக்கப்பட்ட கடலூர் நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனம் சிப்காட் நிறுவனத்திற்கு சொந்தமான 1600 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி வந்தது. அதை அந்த நிறுவனத்திடமிருந்து மீட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dangerous factory closed in cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->