அறிமுக வீரரின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியா ஆதிக்கம்! சோடை போன ஆஸ்திரேலியா! கண்டம் தப்பிய கோலி!
india vs australia boxing day test match day 1
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக எதிர்பார்த்தது போலவே ஹனுமா விஹாரியும், அறிமுக வீரர் மயங் அகர்வாலும் களமிறங்கினார்கள்.
போட்டி தொடங்கியது முதலே ஆஸி அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அதனால் மயங் அகர்வால் அடக்கி வாசிக்க, மறுபுறம் ஹனுமா விஹாரி ஆஸியை படுத்தி எடுத்துவிட்டார். அவரது முதல் ரன்னே 25 ஆவது பந்தில் தான் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில், ஸ்லிப்பில் நின்ற பிஞ்ச் இடம் கேட்ச் கொடுத்து விஹாரி (8) ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் புஜாரா வந்து ஆடுகளத்தை கெட்டியாக பிடித்து நங்கூரத்தை போட்டார். மற்றொரு தொடக்க வீரர் மயங் அகர்வால், கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று இரண்டு ரன்களாக ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப ஆடினார். தொடர்ந்து ஆடிய அவர் அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் வந்த கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். பொறுமையாக விளையாடிய புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 21-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். 50 ரன்களைச் சேர்க்க அவர் 152 பந்துகளைச் சந்தித்தார் என்று அவரது ஆட்டத்தினை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி 47 ரன்களுடனும், புஜாரா 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஆட்டத்தில் 87 ஆவது ஓவரில் ஸ்டார்க் பந்துவீச்சில் விராட் கோலி கொடுத்த கேட்சை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தவறிவிட்டார்.
English Summary
india vs australia boxing day test match day 1