திருமண வரம் தரும் காரடையான் நோன்பு! - Seithipunal
Seithipunal


திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு ஆகும். சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் இந்த நோன்பினை மேற்கொள்வார்கள். மாசி மாத முடிவில் பங்குனி மாத தொடக்கத்தில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தப் பண்டிகையின்போது பெண்கள் திருமாங்கல்யத்தை புதிதாக மாற்றிக் கொள்வர். இந்த நோன்பின்போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர். காரடையான் நோன்பு மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரம் அருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர்.

விரதம் இருப்பது எப்படி?

காரடையான் நோன்பு நாளை வெள்ளிக்கிழமை (15.03.2019) அன்று வருகிறது. அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை அணிய வேண்டும்.

ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன் விளைந்த நெல்லைக்குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். 

நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு மஞ்சள், வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் சரடு உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். இலையின் நடுவில் வெல்ல அடையும், வெண்ணெயும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாத்தி, பின்னர் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம்.

நோன்பு தொடங்கியது முதல் முடிக்கும் வரை, தீபம் சுடர்விட்டு எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.

காரடையான் நோன்பின் பலன் :

இவ்விரத முறையை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பின்பற்றுவதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும் நேசமும் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களுடன் நிறைவான வாழ்க்கை பெண்களுக்கு கிடைக்கும்.

காரடையான் நோன்பு மேற்கொண்டு சாவித்திரி வீரம், பக்தி, விவேகம், பொறுமை, திடநம்பிக்கை ஆகியவற்றுடன் எமதர்மரிடம் போராடி தனது கணவனின் உயிரினைத் திரும்பப் பெற்றாள். அதேபோல் நாமும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இவ்விரத வழிபாட்டினை மேற்கொண்டு வாழ்க்கையின் இன்னல்களை வென்று வசந்தமாக்குவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumana varam tharum numpu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->