உரிமை இழந்தோம்! உயிரையும் இழந்தோம்! குற்றத்தையும் மறந்தோமே! அன்புமணி வேதனை! - Seithipunal
Seithipunal


இலங்கையில் சுயமரியாதையுடன் வாழும் உரிமையைக் கேட்டு போராடியதற்காக ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதன்      09-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் எட்டப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகை உலுக்கிய ஹோலோகாஸ்ட் யூதர் இனப்படுகொலை, உக்ரேனிய இனப்படுகொலை, கம்போடிய இனப்படுகொலை, கஜகஸ்தான் இனப்படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்தையும் விட கொடூரமான முறையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உணவும், குடிநீரும் கூட வழங்காமல் 5 லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்களை குறுகிய முள்ளிவாய்க்கால் நிலப்பரப்புக்குள் ஒதுக்கித் தள்ளி, அவர்கள் மீது தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை வீசியும், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான அப்பாவித் தமிழர்களை இராஜபக்சே, மைத்ரிபால சிறிசேனா ஆகியோர் தலைமையிலான சிங்கள அரசு கொடூரமாக படுகொலை செய்தது. அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் கூட உயிருடன் பிடிக்கப்பட்டு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் தவிர, மீதமுள்ள மூன்றரை லட்சம் தமிழர்கள் வவுனியா முள்வேலி முகாமுக்குள் அடைக்கப்பட்டு நடை பிணங்களாக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் மறுக்கப்பட்டன. பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு தான் அவர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப் பட்டனர். இவை தவிர தமிழர் குலம் தழைத்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் பெண்களின் வயிற்றில்  உருவான குழந்தைகளைக் கூட கொன்றொழிக்கும் கொடூர அணுகுமுறையை சிங்களப்படைகள் கையாண்டன. 30 ஆண்டுகளாக நடந்த இலங்கை இனப்படுகொலை 2009-ஆம் ஆண்டில் உச்சத்தை அடைந்தது. அதன்பின்னர் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படவில்லை. அவர்களை தண்டிக்கும் முயற்சியில் முன்னேற்றங்களை விட சறுக்கல்களே அதிகமாக  உள்ளன.

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலமாகவே தண்டிக்க முடியும் என்பதால், அதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சில நாடுகளால் கொண்டு வரப்பட்ட போது, அதற்காக பல்வேறு நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பசுமைத் தாயகம் ஈடுபட்டது. இலங்கை இனப்படுகொலை நடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க  வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற முறையில் நான் இரு முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில்  பங்கேற்று  இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். மற்ற கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் ஆலோசகர்கள் பங்கேற்று நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர். இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகளுக்கு விளக்கும் வகையில், ஆணைய வளாகத்தில் பல்வேறு அரங்கக் கூட்டங்களையும் பசுமைத் தாயகம் நடத்தியது.

மனித உரிமையில் அக்கறை கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் பசுமைத் தாயகமும் இணைந்து  மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்; அந்த விசாரணையில் பன்னாட்டு சட்ட வல்லுனர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும்,  அதன்மீது இலங்கை நடவடிக்கை எடுக்காத நிலையில், மேலும் 2 ஆண்டுகள் காலநீட்டிப்பு வழங்கி புதிய தீர்மானம் 2017-&ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், இன்று வரை போர்க்குற்றவாளிகள் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மாறாக, போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இரக்கமின்றி  ஈழத்தமிழரை படுகொலை செய்த கொடூரர்களை கதாநாயகர்களாக காட்டும் முயற்சி அரங்கேற்றப்படுகிறது.

ஈழத்தமிழர்கள் தமிழீழத்தை தாய் நாடாக கருதினால், இந்தியாவைத் தான் தந்தை நாடாக கருதுகின்றனர்.  அதனால், ஈழத்தமிழர்களை இந்தியா தான் காப்பாற்றியிருக்க வேண்டும். அந்தக் கடமையை செய்யத் தவறிவிட்ட நிலையில், குறைந்தபட்சம் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய முயற்சிகள் எதையுமே  இந்தியா மேற்கொள்ளவில்லை. அதன்பயனாக இனப்படுகொலைக்கு காரணமான இராஜபக்சே கட்சி  இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, அடுத்து ஆட்சியைப் பிடிக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் ஈழத்தமிழருக்கு ஆதரவான மன நிலையை, திரைப்படங்கள் மூலமாக மாற்ற முடியும் என்ற எண்ணத்தில் திரைத்துறை பிரபலங்களுக்கு தனது பினாமி நிறுவனம் மூலம் கோடிகளை கொட்டிக் கொடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார். இது மிகவும் ஆபத்தான, கவலையளிக்கும் போக்கு ஆகும். இதேநிலை நீடித்தால் இலங்கையில் இராஜபக்சே  மீண்டும் ஆட்சிக்கு வருவதுடன், தமிழகத்திலும் ஈழத்தமிழர் ஆதரவு குரல்கள் வலுவிழக்கச் செய்யப்படும்.

இப்படி ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க, இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அந்தப் பணிகளை இந்தியா மேற்கொள்வது தான் பொருத்தமாகவும், வெற்றிகரமானதாகவும் அமையும். மத்திய ஆட்சியாளர்கள் தாமாக முன்வந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்ற நிலையில், இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை தமிழர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

we are forgot in srilankan tamilan isssues says anbumani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->