செந்தில் பாலாஜி திமுகவிற்கு போகிறாரா?! தினகரன் வெளியிட்ட பரபரப்பு கடிதம்!  - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொது செயலாளர் தினகரன் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 9 மாத காலத்தில், ஓர் அரசியல் இயக்கமாக நாம் அடைந்திருக்கும் அபார வளர்ச்சிக்கு இந்த தமிழகம் தான் சாட்சி. 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்ற ஜெயலலிதாவின் கொள்கை காக்க 'மக்களால் நாங்கள், மக்களுக்காகவே நாங்கள்' என புறப்பட்ட நமது பயணத்தில், இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பது என்ற இலக்கைக் கொண்டு, தற்போது, ஒரு கோடியே இருபது லட்சத்தை அடைந்து, ஆவலோடு மேலும் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கையோடும், 20 சார்பு அணிகளைக் கொண்டு, அமமுக அமைப்பு ரீதியாக 70 மாவட்டக் கழகங்கள் என பிரம்மாண்டமாக தொண்டர்களின் கட்டமைப்போடு எழுந்து நிற்கும் இந்தப் பேரியக்கம், தமிழக மக்களுக்காகப் போராடி அவர்களின் துயரத்தையும், கண்ணீரையும் துடைத்து வருகிறது. இந்தப் பண்பு, ஜெயலலிதாவின் பிள்ளைகளின் இயல்பு, நமது அடிப்படை குணம். 

இவை அத்தனையும் ஒரு சாதகமான சூழலில் ஏற்பட்டுவிடவில்லை. மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துதான் இந்த விஸ்வரூப வளர்ச்சியை நாம் பெற்றிருக்கிறோம். அடக்குமுறையையும், அநீதியையும் கடந்துதான் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளோம். அச்சுறுத்தல்களையும், அராஜகங்களையும் எதிர்கொண்டுதான் இந்த அபார வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம்.

திரும்பிய திசையெல்லாம் தடைகளே இருந்தபோதும், தடந்தோள்தட்டி தடம் பதித்த வெற்றியினை ஆர்.கே.நகரில் பெற்றோம். முதல்வர் பழனிசாமியின் துரோக கூட்டத்திற்கு தோல்வியைத் தந்து, பிரதான எதிர்க்கட்சி என மார் தட்டிக்கொள்ளும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்து, ஒரு சுயேட்சையாய் வாகை சூடி நின்றோம். இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானதற்கான காரணம் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகிய நீங்கள் இருப்பதாலும், பெருகி பரவி ஆர்ப்பரித்து வரும் இளைஞர் கூட்டத்தாலும், மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றதாலும் மட்டுமே.

இந்த எழுச்சியைத் தடுக்கவும், மக்கள் பணியில் நமது முன்னேற்றத்தை முடக்கவும், முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துரோகிகளும், நம் எதிரிகளும் முழு மூச்சாகவும், தீவிரமாகவும் அதில் ஈடுபட்டுள்ளனர். துரோகத்தை வேரறுக்க, தியாகத்தின் பின் அணிவகுத்து நிற்கின்ற நம்மை மீண்டும் அவர்களோடு இணைய அழைக்கும் துரோகக் கூட்டத்தின் செயலும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைப்புச் செயலாளர், அம்மாவட்டத்தில் எழுச்சியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய மாவட்டச் செயலாளரை மாற்றி, அந்த வாய்ப்பைத் தனக்கு அளித்திட வேண்டுமென வைத்த கோரிக்கையை நிராகரித்த காரணத்தாலும், தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் துரோகத்தின் பக்கம் சாய்ந்துள்ளார்.

மேலும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அதிமுக (அம்மா) என்ற பெயரில் நாம் இயங்கியபோது அறிவிக்கப்பட்டிருந்த ஒரு ஒன்றிய கழகச் செயலாளர், நேற்று கட்சியை விட்டுச் சென்றுவிட்டாராம், அதனை தற்போது ஊடகங்களில் பெரிதுபடுத்தி காட்டப்படுகிறது.

மறைமுகமாக மதுபானக் கூடம் நடத்திக்கொண்டிருந்த அந்த நபர் ஏற்கெனவே இதே செயலைச் செய்திருந்தபோது அப்போது அந்த மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த நமது கட்சியின் பொறுப்பாளர், அவரை மீண்டும் அழைத்துக் கொண்டுவந்து, அந்த நபரை மன்னித்து வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு நடந்துகொண்ட அந்தப் பொறுப்பாளர் தனது பொறுப்பை மறந்து தற்போது, தூக்க நிலைக்குச் சென்றாரா? அல்லது தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா? என்பது தெரியவில்லை.

ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? நம் இயக்கம் என்ற கற்பக விருட்சத்தின் ஆணிவேர், ஜெயலலிதாவின் கொள்கைகளும், அடிமரமும், நுனிமரமும், கிளைகளும், கனிகளும் என அத்தனையும், உண்மையான தொண்டர்களாகிய நீங்களும் தான்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமை ஏற்ற பொழுதும் ஒரு சிலர் தங்கள் சுயநலனுக்காக தலைமையை விட்டு விலகுவதும், பின் மன்னிப்பு கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. நெல்மணிகளோடு, களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் தான். அவற்றைக் காலம் உரிய நேரத்தில் அடையாளம் காட்டிவிடும்.

ஒரு சில நபர்களோ, ஒரு சிறு குழுவோ தங்களின் சுயநலனுக்காக விலகிச் செல்வதால், கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பார்களேயானால், அது, 'பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும்' என நினைப்பது போன்றது. சுத்த தங்கங்களாகிய நீங்கள் இருக்கின்றபோது, முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள்?

ஜெயலலிதாவின் கொள்கைகள்தான் நமது அடிப்படை, மக்கள் நலன்தான் நமது பணி, இதற்கு முரணான எண்ணம் கொண்டவர்கள் விலகி நிற்பது நலமே. முழுக்க முழுக்க தன்னலம் கருதா தியாக உள்ளங்களால் நிரம்பிய இயக்கம் இது. பதவி, பொருளாதாரம், ஆதாயம், என எதையும் கருத்தில் கொள்ளாமல், துரோகத்தை வீழ்த்த, தியாகத்தின் பக்கம் பெறுந்திரளாய் வந்து நிற்கின்ற தூய தொண்டர்கள் கட்டி எழுப்பிய எஃகு கோட்டை தான் அமமுக.

தலைமை, தொண்டர், நிர்வாக அமைப்பினர் என நம் அத்தனை பேரின் நோக்கமும் சிந்தனையும், செயலும், துரோகத்தை வீழ்த்த கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு மாறான சிந்தனைகள் இங்கு நிலைத்திட முடியாது. தூய தொண்டர்களாகிய உங்களைக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை, யாராலும் தீண்டி பார்க்கவும் முடியாது, சீண்டி பார்க்கவும் முடியாது.

அப்படிச் செய்தால், அது உயர் அழுத்த மின்சாரத்தைத் தொடுவதற்கு சமம். ஜெயலலிதாவின் கனவையும், நல்லரசையும் நிலைநாட்டிட உறுதி கொண்டு பயணித்திடுவோம். அதிமுகவையும், இரட்டை இலையையும் துரோகிகளிடமிருந்து மீட்டெடுப்போம். அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதாலும், 'கஜா' புயலால் டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பெரும் துன்பம் அடைந்ததாலும் எனது பிறந்த நாளைக் கொண்டாடிட வேண்டாம் என்ற எனது அன்பு வேண்டுகோளை ஏற்ற ஆருயிர் கழக உடன்பிறப்புகளுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் ஏராளம்.  தேர்தல் களங்களுக்கு ஆயத்தம் ஆகிடுக. வெற்றிகளை குவித்திட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. ஆம், 'எதிர்காலம் வரும், நம் கடமை வரும்" என தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran wrote letter about senthil balaji issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->