புதிய மொபைல் செயலி மூலம் வீடு தேடி மது விற்பனை : தரம் கெட்ட அரசியல் வாதிகளால் தள்ளாடும் தமிழகம் - டாக்டர் ராமதாஸ் வேதனை! - Seithipunal
Seithipunal


மக்கள் நலனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாத  பினாமி அரசு டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க வீடு தேடி மது விற்பனை செய்ய முயல்வது சமூகக்கேடான செயல் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

தமிழ்நாட்டை ஆளும் பினாமி அரசுக்கு ஆக்கப்பூர்வமாக வளர்ச்சி குறித்து சிந்திக்கத் தெரியாது என்பதை அதன் அண்மைக்கால செயல்பாடுகள் மீண்டும், மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் வருமானத்தை அதிகரிப்பது குறித்த தமிழக அரசின் முடிவுகள் அதைத் தான் காட்டுகின்றன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் சாலை விபத்துகளுக்கான ஊற்றுக்கண்ணாக திகழ்வதால் அவற்றை மூட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டம் நடத்தியது. அதன் பயனாக தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், குடிமக்கள் வாழும் பகுதிகளில் மதுக்கடைகளை தமிழக அரசு மதுக்கடைகளை திறந்தது.

அதையும் அறப்போராட்டங்கள் மற்றும் சட்டப்போராட்டங்கள் மூலம் பா.ம.க. கட்டுப்படுத்தியது. ஆனால், மத்திய ஆட்சியாளர்களின் உதவியுடனும், தவறான தகவல்களை அளித்தும் நகர்ப்புற எல்லைகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளது.

இதற்கான முறைப்படியான தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே நெடுஞ்சாலைகளில் 1000 மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக மேலும் 500 மதுக்கடைகளை திறப்பதற்கு   தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மற்றொருபுறம் உயர்வகை மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக செல்பேசி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் 30 இடங்களில் செயல்பட்டு வரும் எலைட் மதுக்கடைகளில் உள்ள உயர்வகை மதுக்களின் விவரங்கள் செயலியில் இடம் பெற்றிருக்கும் என்றும், தங்களுக்கு தேவையான மதுவகைகளை தேர்வு செய்து பணம் செலுத்தினால் உடனடியாக அவை வாடிக்கையாளரின் முகவரியில் வழங்கப்படும் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் முற்போக்காக சிந்திந்து, புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவது தான் அரசின் கடமையாகும். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவோ, மக்கள் நலனுக்காகவோ துரும்பைக்கூட கிள்ளிப் போடாத  பினாமி அரசு, புதிய மதுக்கடைகளை திறத்தல், மதுவகைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகிப்பது போன்ற சமூகக்கேடான  விஷயங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறது. அரசுக்கான கடமைகள் அனைத்தையும் மறந்து விட்டு, மது விற்பதை மட்டுமே முதன்மைப் பணியாக அரசு கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கடந்த 7 ஆண்டுகளாக ஒருமுறை கூட வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட முடியவில்லை; தமிழக அரசின் வரி வருவாய் வளர்ச்சி ரூ.67,000 கோடி குறைந்து விட்டது; விஷன் -2023 எனப்படும் தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை;

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டி அடுத்த ஆண்டில் ரூ.7 லட்சம் கோடியை எட்டவுள்ளது. இது பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு  மதுவணிகத்தை  பெருக்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது என்றால் அது ஆளத்தகுதியற்ற அரசு என்று தான் பொருள்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, இரு கட்டங்களாக 1000 மதுக்கடைகளை மூடியது. தமிழக அரசின் கொள்கை முடிவின்படி பார்த்தாலும் நடப்பாண்டில் 500 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். ஆனால், அதுகுறித்து ஆளுனர் உரையிலோ, அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையிலோ எந்த அறிவிப்பும் இல்லை.

மாறாக, மூடப்பட்ட 1000 மதுக்கடைகளுக்கு பதிலாக 1000 புதியக் கடைகள் கடந்த சில மாதங்களில் திறக்கப்பட்டன. இப்போதும் கூடுதலாக 500 மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. இதுபடிப்படியான மதுவிலக்கு அல்ல.... மதுப்பெருக்கு என்பதை பினாமி ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து நிதி நெருக்கடிக்கும் மது விற்பனையை அதிகரிப்பது தான் தீர்வு என்று தொலைநோக்குப் பார்வையற்ற தமிழக அரசு கருதுகிறது. ஆனால், தமிழகத்தின் இன்றைய அனைத்து சிக்கல்களுக்கும் மது விற்பனை தான் காரணம் என பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாற்றுகிறது.

மது விற்பனையை பெருக்குவதன் மூலம் அரசின் வருவாய் சில ஆயிரம் கோடிகள் வேண்டுமானால் அதிகரிக்கலாம்... இது தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்காது. மாறாக மதுக்கடைகளை மூடினால் அரசின் நேரடி வருமானம் ரூ.30,000 கோடி அளவுக்கு குறையலாம்.

ஆனாலும்,  மதுவால் மனித சக்தி வீணடிக்கப்படுவதை தடுப்பதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 2% அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட, தமிழகத்தின் வருவாய் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் கோடி அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரித்து வளமும் நலமும் பெருகும் என்பதே பா.ம.க.வின் பார்வையாகும்.

எனவே, புதிய மதுக்கடைகள் திறப்பது, வீடுகளுக்கு நேரடியாக மது வணிகம் செய்வது போன்ற பயனற்ற வேலைகளை விடுத்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC plan to introduce new mobile app for liquor sale


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->