தமிழக அரசின் புதிய அறிவிப்பு! பாமகவுக்கு கிடைத்த வெற்றி! டாக்டர் ராமதாஸ் பெருமிதம்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகள்  பாதுகாப்புக்காக காவல்துறையில் புதிதாக தனிப்பிரிவு  தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள்  எழுப்பட்டு வரும் நிலையில், அவற்றைப் போக்கும் நோக்குடன் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை  நிச்சயமாக பயனளிக்கும். இந்த நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்- பெண்களின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. மகளிருக்கு எதிரான குற்றங்கள் சில கும்பல்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படு வரும் நிலையில், அவற்றை  தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்காக தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்; அப்பிரிவின் தலைவராக காவல்துறை தலைமை இயக்குனர் நிலையில் பெண் இ.கா.ப. அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று 2014-15 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் இந்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் இதை முக்கிய வாக்குறுதியாக பா.ம.க. முன்வைத்திருந்தது. பெண்கள் பாதுகாப்பில் பா.ம.க. அந்த அளவுக்கு உறுதியாக இருந்தது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கை 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. மகளிரின் பாதுகாப்புக்காக காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்ற  பா.ம.க.வின் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்ததும் இதற்கு பெரும் துணையாகவே அமைந்தது. பெண்களின் பாதுகாப்புக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் தனிக்காவல் பிரிவு கட்டாயத் தேவையாகும்.

பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களுக்கு காதல் நாடக வலைவீசி நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் அனைவர் மனங்களிலும் அமிலம் ஊற்றியதற்கு இணையான வலியையும், வேதனையையும் ஏற்படுத்தின என்பதை  எவரும் மறுக்க முடியாது. இது போன்ற கொடூரங்களும், பணப் பறிப்புகளும் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன; இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதை வெளிப்படுத்த முடியாமல் நடை பிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். இவை ஒருபுறமிருக்க, எவ்வளவு தீய பழக்கத்திற்கு ஆளானவர்களாக இருந்தாலும், வாழ்வாதாரம் தேட வழியில்லாதவர்களாக இருந்தாலும்  தாங்கள் காதலைச் சொன்னால் அதை பெண்கள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு பிரிவினரிடம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு ‘‘ஒருதலைக் காதல் கொலை விபரீதங்கள்’’ வளர்த்து விடப்பட்டுள்ளன.

இத்தகைய தீமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாட வேண்டும் என்ற சிந்தனை தான் பெண்கள் பாதுகாப்புக்காக தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அடித்தளமாக அமைந்தது. அந்தக் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டிருப்பது  பெண்களைப் பாதுகாப்பதில் முக்கியமான மைல்கல் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் இந்தப் பிரிவு  இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் நிலை அதிகாரியும், சென்னை மற்றும் மாவட்டங்களுக்கு கண்காணிப்பாளர் நிலையிலான  அதிகாரிகள் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் இப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக இப்பிரிவின்  தலைவராகவும்,  மண்டல கண்காணிப்பாளர்களாகவும் மகளிரை நியமிக்க வேண்டும். இப்பிரிவின் மூலம் பொது இடங்களில் சாதாரண உடையில் பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக அதிக எண்ணிக்கையில் மகளிர் காவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் காவலர்கள் நியமனத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"  என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SPECIAL DEPARTMENT FOR WOMEN POLICE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->