அக்கினி கலசத்த்தை‌ மீண்டும் அமைக்க விட்டால் போராட்டம் வெடிக்கும்... மருத்துவம் ராமதாஸ் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு சமுதாய அமைப்பினர் கடும் எதிர்ப்பு‌ தெரிவித்து போராட்டம் நடைபெற்ற நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தார். 

இந்த நிலையில் நேற்று இரவு நாயுடுமங்கலம் பகுதியில் பாமகவினர் புதிய அக்னி கலசத்தை நிறுவினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அக்னி கலசத்தை அகற்றியதோடு பாமகவினரை கைது செய்தனர். போலீசாரின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில் திருவண்ணாமலை அக்கினி கலசம் சின்னம் அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது: மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் "திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலத்தில், ஏற்கனவே அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வைக்கப் பட்ட அக்கினிக் கலசம் சின்னத்தை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அகற்றியுள்ளன. அக்கினிக் கலசம் சின்னத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், யாரோ சிலரை திருப்திப் படுத்துவதற்காக அதை அகற்றியிருப்பதையும், பாமகவினரை கைது செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கவை. திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டு சாலையில், 1989ம் ஆண்டு அக்னி கலச சின்னம் வன்னியர் சங்கத்தால் அமைக்கப்பட்டு, அதை நான் திறந்து வைத்து கொடியேற்றினேன். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் புனித அடையாளமாக போற்றப்பட்டு வந்தது.

அதனால் யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்ட போது, அக்கினிக் கலச சின்னத்தை தற்காலிகமாக அகற்றலாம் என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு அங்கு அச்சின்னத்தை மீண்டும் அமைக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதற்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்ட நிலையில், அங்கிருந்து தற்காலிகமாக எடுக்கப்பட்ட சின்னம், பின்னர் மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் வைக்கப்பட்டது. அதன்பின் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அக்கினிக் கலச சின்னம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய மாவட்ட நிர்வாகம், அகற்றப்பட்ட அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க அனுமதிப்பதாக தெரிவித்தது.

அது தொடர்பாக திருவண்ணாமலை வட்டாட்சியர் - பா.ம.க. நிர்வாகிகள் இடையே தொடர்ந்து பேச்சுகள் நடைபெற்றன. ஆனால், ஒவ்வொருமுறையும் காலம் தாழ்த்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம், சிக்கலுக்கு தீர்வு காண எந்த முயற்சியும் செய்யவில்லை. அக்கினிக் கலசம் அகற்றப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அனைவரையும் மதிக்கும் அரசாக இருந்திருந்தால், நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் அக்கினிக் கலச சின்னத்தை அமைக்க அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மாவட்ட நிர்வாகம் தவறி விட்ட நிலையில், பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் புதிதாக அமைக்கப்பட்ட அக்கினிக்கலச சின்னத்தை நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் இன்று அதிகாலையில் அமைத்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அக்கினிக் கலச சின்னத்தை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி பா.ம.க.வினரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னம் அமைக்கப்பட்டதால் கடந்த காலங்களில் போக்குவரத்துக்கோ, அல்லது வேறு வகையிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதை மாவட்ட நிர்வாகமே ஒப்புக்கொள்ளும் வகையில் தான் சாலை மேம்பாட்டுப் பணிகளின் போது அகற்றப்பட்ட அக்கினிக்கலச சின்னம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது, அக்கினிக் கலச சின்னம் 2022-ஆம் ஆண்டில் அகற்றப்பட்டது ஏன்? அதன்பின்னர் இரு ஆண்டுகளாக பேச்சு நடத்தியும் அக்னிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளிக்காதது ஏன்? இந்த சிக்கலில் இரு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மாவட்ட நிர்வாகம், இப்போது மட்டும் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்ட அக்கினிக் கலச சின்னத்தை ஒரு சில நிமிடங்களில் அகற்றியது ஏன்? யாரை திருப்திப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கைகளைக் கட்டிக் கொண்டு கட்டளைகளை நிறைவேற்றுகிறது? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விளக்கியாக வேண்டும்.

திருவண்ணாமலை, நாயுடுமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல சிலைகளும், சின்னங்களும் உள்ளன. அண்மையில் கூட விதிகளுக்கு மாறாக சிலைகள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது. ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அக்கினிக் கலச சின்னத்தை மட்டும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மீண்டும், மீண்டும் அகற்றுகிறது என்றால், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். அக்கினிக் கலசம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது.

அதை பலவீனமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கருதினால் அவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து, நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drramadoss warning to TNGovt regards nayudumangalam Agni kalasam issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->