தமிழை அலுவல் மொழியாக்கலாமே.? இந்தி வீழுந்து விடும் என்ற அச்சமா.? அமித் ஷாவுக்கு மருத்துவர் ராமதாஸ் கேள்வி.!! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடு முழுவதும் அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதன்பிறகு அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்படும் என்றும் பேசியதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தி மீது நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?

இந்திய மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை ஏற்றுக் கொண்டாகத் தான் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை; மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது. இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோது வெல்லாது.

இந்தியை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் ஏங்கவில்லை; அவை எப்போது எதிர்ப்பு நிலையில் தான் உள்ளன. அத்தகைய சூழலில் அனைவரும் இந்தியை எதிர்ப்பின்று ஏற்கும் நிலை வரும் என்றால், அத்தகைய நிலையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது என்று தான் பொருள். கடந்த காலங்களில் அத்தகைய முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே இனிவரும் காலங்களிலும் வீழ்த்தப்படும். இது உறுதி.

எந்த மொழியுடனும் இந்தி போட்டிப்போடவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவது உண்மையென்றால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளுக்கு உரிய தகுதியை வழங்க மத்திய அரசு மறுப்பது ஏன்? மாநில மொழிகள் மத்திய அலுவல் மொழிகளாக்கப்பட்டால் இந்தி வீழ்ந்து விடும் என்ற அச்சத்தால் தானே?

இந்தி மொழியின் செழுமை மீதும், வலிமை மீதும் நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக மத்திய அரசு அறிவிக்கட்டும். அவற்றில் எந்த மொழி சிறந்த மொழியோ, எது இலக்கிய வளம் மிக்க மொழியோ, எது இலக்கணத்தில் சிறந்த மொழியோ அது மக்கள் மனங்களை ஆளட்டும்!" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss condemns AmitShah that Hindi will decline official language


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->