அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்! மன்னிப்பே கிடையாது! வலுக்கும் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவை ஆக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கு இதுவே அவலமான உதாரணமாகும். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குருதிக் கொடை பெறும் போதும், கொடையாகப் பெறப்பட்ட குருதியை நோயர்களுக்கு செலுத்தும் போதும் கடைபிடிக்க வேண்டிய எந்த நடைமுறைகளையும் அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை என்ற உண்மையை சாத்தூர் நிகழ்வு படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. மருத்துவர்களும், குருதி வங்கி பணியாளர்களும் இந்த விஷயத்தில் காட்டிய அலட்சியத்தால் ஒரு பாவமும் செய்யாத இளம்பெண் உயிர்க்கொல்லி நோயை வாங்கியிருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கையையும், நிம்மதியையும் முழுமையாக இழந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் மதுரை அரசு மருத்துவமனையிலும், தேவைப்பட்டால் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் உயர்தர கூட்டு மருத்துவம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படியே அப்பெண்ணுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை தொடங்கப் பட்டுள்ளது. ஆனால், அப்பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை? சிவகாசி அரசு குருதி வங்கியில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் மூவரை பணி நீக்கம் செய்ததுடன், இந்தப் பிரச்சினையை முடித்து விட அரசு முயல்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

கருவுற்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட குருதியை கொடையாக வழங்கிய இளைஞர் 2016-ஆம் ஆண்டு முதலே குருதிக் கொடை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அப்போதே, அவருக்கு நடத்தப் பட்ட சோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஏதோ காரணங்களால் அதை அவருக்கு மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அதனால் தான் கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி தமது உறவினருக்கு செலுத்தப்பட்ட குருதிக்கு ஈடாக தமது குருதியை அவர் கொடையாக வழங்கியுள்ளார். அந்த குருதி தான் இம்மாதம் 3-ஆம் தேதி கருவுற்றப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த 6-ஆம் தேதி வெளிநாட்டு வேலைக்காக சம்பந்தப்பட்ட இளைஞருக்கு குருதி ஆய்வு செய்யப்பட்ட போது தான், அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சிவகாசி அரசு குருதி வங்கிக்கு தகவல் தெரிவித்த போதிலும், அதற்கு சில நாட்கள் முன்பாக அவரது குருதி கருவுற்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டதால் ஆபத்தை தடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்ள முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒருவரிடமிருந்து கொடையாகப் பெறப்பட்ட குருதி 5 வகையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ள இளைஞரிடமிருந்து பெறப்பட்ட குருதி அத்தகைய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. ‘‘கொடையாகப் பெறப்படும் குருதியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாது. அது குறித்து அதிகாரிகள் எவரும் தங்களுக்கு தெரிவிக்க வில்லை. அதற்கான பயிற்சியும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை’’ என்று பணிநீக்கம் செய்யப்பட்ட குருதி வங்கியின் தற்காலிக பணியாளர் வளர்மதி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, குருதி வங்கிகளில் நிரந்தர பணியாளர்களை அமர்த்தாமல் தற்காலிக பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையாக பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்பது தான் இத்தகைய விபரீதங்களுக்கு காரணமாகும். கொலைக்கு துணை போவதற்கு இணையான இத்தகைய குற்றங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அத்துறையின்  உயர் அதிகாரிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

சாத்தூரில் நடந்த நிகழ்வு மன்னிக்க முடியாத தவறு என்று கூறுவதன் மூலமும், தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதன் மூலமும் இந்த குற்றத்திலிருந்து சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் தப்பி விட முடியாது. மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக் கொடுத்துள்ள இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும். இந்தக் கொடுமைக்கு காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்படக் கூடாது. இனியும் இத்தகைய விபரீதங்கள் நிகழாதவாறு குருதிக் கொடை நடைமுறையில் தணிக்கை வலுப்படுத்தப்பட  வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss said minister vijayabaskar should resign his minister post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->