இடஒதுக்கீடு வழங்க நிதி ஆயோக் தடை கோருவது சமூக நீதி மீதான மிகப்பெரிய தாக்குதல் : டாக்டர் ராமதாஸ் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


இடஒதுக்கீடு வழங்க நிதி ஆயோக் தடை கோருவது சமூக நீதி மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களிலும், பெரு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நிதி ஆயோக் அமைப்பு கூறியுள்ளது. சமூக நீதிக்கு எதிரான இந்தக் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார், ‘‘தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதே இருக்கக்கூடாது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவது நாட்டின் பொருளாதாரத்தை மிகக்கடுமையாக பாதிக்கும்’’ என்று கூறியிருக்கிறார். ராஜிவ் குமாரின் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நிதி ஆயோக் அமைப்பின் முந்தைய துணைத் தலைவரான அரவிந்த் பனகாரியாவும் இதே கருத்தைத் தான் கொண்டிருந்தார். 

இப்போது அவரது இடத்திற்கு வந்திருக்கும் ராஜிவ்குமாரும் அதே கருத்தைக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது.  இந்திய அரசுக்கு பொருளாதாரம், சமூகம், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட விஷயங்களில் வழிகாட்டும் அமைப்பான நிதி ஆயோக்கின் தலைமைப்பொறுப்புக்கு வருபவர்கள் சமூக நீதிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், செயல்படுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும்.

இட ஒதுக்கீடு வழங்குவது திறமையாளர்களை பின்னுக்குத் தள்ளி விடும் என்றும், இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வருபவர்களுக்கு திறமை இருக்காது என்றும் பொதுவான வாதம் வைக்கப்பட்டு வருகிறது. இது சமூக நீதி செழித்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் காலம் காலமாகக் கூறி வரும் சொத்தை வாதமாகும். இதில் எந்த நியாயமும் இல்லை. இட ஒதுக்கீட்டில் அரசு மற்றும் பொதுத்துறை பணிக்கு சென்றவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றுவதற்கு லட்சக்கணக்கான ஆதாரங்களைக் காட்ட முடியும்.

அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீடு என்பது திறமையற்றவர்களுக்கு வேலை கோருவது அல்ல. மாறாக, திறமையுள்ள பலருக்கும் அவர்களின் சமூக படி நிலையைக் காரணம் காட்டி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டுவதற்கான சமூகநீதி ஆயுதம் தான் இட ஒதுக்கீடு ஆகும். இந்த அடிப்படையைக் கூட உணராமல் இட ஒதுக்கீடு வழங்குவது திறமையை பின்னுக்கு தள்ளி விடும் என்றும், வளர்ச்சிக்கு தடையாக அமையும் என்றும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் கூறக்கூடாது. இது சமூக நீதி மீது நடத்தப்படும் மிகக்கொடிய தாக்குதலாகவே அமையும்.

அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் தனியார் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் தான் வேலைவாய்ப்பை வழங்கும் ஆதாரமாக திகழப் போகின்றன. அவ்வாறு இருக்கும் போது அவற்றில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நீதியாக அமையும். அதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியாக இருந்தாலும் அதை மக்கள் இணைந்து முறியடிக்க வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வெளிவருகின்றனர். அவர்களில் 10 விழுக்காட்டினருக்குக் கூட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதை ராஜிவ் குமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அதேநேரத்தில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் வழங்கக்கூடிய தனியார் மற்றும் பெரு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடாது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ்குமார் கூறுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத முரண்பாடு ஆகும்.

எனவே, நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் தனியார்துறை இடஒதுக்கீடு கோரிக்கையை விரைந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss condemns to Niti Aayog recomendation to ban reservation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->