பெங்களூரில் தமிழ் படத்திற்கு எதிராக வன்முறை : கன்னட வெறியர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் தமிழ் படத்திற்கு எதிராக வன்முறை. கன்னட வெறியர்களுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் மெர்சல் படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

பெங்களூர் திரையரங்கில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள திரையரங்குகளில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டு, சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் திரையிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மைசூர் நகரிலும் மெர்சல் திரைப்படத்தை திரையிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இரு நகரங்களிலும் பதற்றம் நிலவுவதால், அங்கு வாழும் தமிழர்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

தமிழர் எதிர்ப்பையே பிரதானமாகக் கொண்டிருக்கும் கன்னடர்கள் தமிழ் திரைப்படங்களை திரையிட விடாமல் முடக்குவது முறையல்ல. பாகுபலி-2 திரைப்படம் வெளியான போது நடிகர் சத்யராஜ் எப்போதோ தெரிவித்த நியாயமானக் கருத்துக்களைக் கூறி அப்படத்தை முடக்கத் துடித்தனர். இத்தகைய போக்கையும், தமிழ் திரைப்பட எதிர்ப்பையும் கைவிட்டு தமிழருடன் சகோதரர்களாக வாழ கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக தமிழர்களுக்கு அம்மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மெர்சல் திரைப்படத்தில் மருத்துவத் துறை ஊழல்கள் குறித்தும், வரி விதிப்புகள் குறித்தும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவை தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. 

யாருடைய மனதையேனும் புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமானதாக இருக்கும். ஆனால், அதிகமாக வரி விதிக்கப்படும் நிலையில் இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் தவறாகும்? தமிழிசை சார்ந்த பாரதிய ஜனதா அரசால் அமைக்கப்பட்ட தணிக்கைக் குழு தான் இப்படத்தைப் பார்த்து திரையிடுவதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இதை விமர்சிப்பது முறையல்ல.

தமிழகத்தின் தலையாய பிரச்சினையான காவிரி சிக்கலில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்து 10 ஆண்டுகளாகிவிட்டன. மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உச்சநீதிமன்றமும் பலமுறை மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 5 கோடி மக்களின் உயிர்நாடியாக விளங்குவது காவிரி தான். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். எனவே, சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக குரல் கொடுத்து சாதிக்க வேண்டும் என்பதை அன்பு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani condemns to kannadians violence


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->