தமிழக மாணவர்களை கொன்று...குறுக்கு வழியில் சீட்டை பிடிக்க முயலும் வட மாநில மாணவர்கள் : தொடரும் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை - டாக்டர் அன்புமணி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து நீதி விசாரணை தேவை என பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்  படிப்பை முடித்து, யு.சி.எம்.எஸ்  மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில்  நண்பர்களுடன் தங்கியிருந்த சரத் பிரபு இன்று காலை விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சரத்பிரபுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்பிரபு நன்றாக படிக்கும் மாணவர் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை.

அதேநேரத்தில் இதுகுறித்த விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, சரத் பிரபு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக யு.சி.எம்.எஸ்  நிர்வாகம் கூறியிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவ மாணவர் சரத்பிரபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதை திசை திருப்பி குற்றவாளிகளைக் காப்பாற்ற இப்படி கூறப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் விஷ ஊசி செலுத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டால் காலியாகும் மருத்துவ மேற்படிப்பு இடத்தில் சேர வாய்ப்புள்ள சிலர் தான் சரவணனை கொலை செய்திருக்கக்கூடும் என்று குற்றச்சாற்று எழுந்திருந்த நிலையில், அதை தற்கொலை என்று கூறி வழக்கை மூடி மறைக்க மருத்துவமனை நிர்வாகம் முயன்றது.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மாணவர்கள் சிலர் என்னைச் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், தில்லி  காவல்துறை ஆணையர், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோரை சந்தித்து இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தான் அவரது உடற்கூறு ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டு மருத்துவர் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல், மருத்துவர் சரத்பிரபு மரணத்தில் உள்ள மர்மமும் விலக்கப்பட வேண்டும்.

அதேபோல் குஜராத்தின் அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் சாதி அடிப்படையில் பேராசிரியர்கள் அளித்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்று சிகிச்சை பெற்று வருகிறார். வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தை ஆளும் பினாமி அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் கொண்டாட்டங்களை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

விரைவில் தில்லி செல்லவிருக்கும் நான் மத்திய அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவேன். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor anbumani ramadoss statement about tamil student mysterious death in delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->