கடலூரில் தற்போதைய நிலை! வேட்பாளர் பெயரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் மக்கள்! சீட் வாங்கி கொடுத்தவர் மீது பாய்ந்த தலைமை! - Seithipunal
Seithipunal


திமுகவும், பாமகவும், நேரடியாக மோதும் கடலூர் தொகுதியில் கள நிலவரத்தை அறிந்து கொள்ள அங்கே உள்ள மக்களிடம் பேசினோம். அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி ஒருபக்கம், திமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் ஒருபக்கம் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சிகளின் எண்ணிக்கையில் அவ்வாறு தான் இருந்தது. ஆனால் வேட்பாளர் தேர்வில் ஒரு கூட்டணி மிகப்பெரிய கோட்டை விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

பாமக வேட்பாளர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமிக்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பிரேமலதா என எல்லோரும் ஒரு சுற்று பிரச்சாரத்தை முடித்துவிட்ட நிலையில், திமுக தரப்பில் வேட்பாளர் தொழிலதிபர் ரமேஷ்க்காக உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் அழகிரி, கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் என பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அமமுக முதன்மை வேட்பாளர் மாற்றப்பட்டுவிட்டதால் அவர்கள் அதிகம் களப்பணியாற்றாமல் களத்தில் உள்ளனர். 

கடலூர் தொகுதியில், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி தொகுதிகள் இடம்பெறுகின்றன. தொகுதியை சார்ந்த பலரும் சொன்ன பதில்கள் வேட்பாளர் தேர்வின் தாக்கம் தெரிந்தது. அந்த வேட்பாளர் பெயரை கேட்டாலே அங்கிருக்கும் மக்கள் கட்சி பேதமின்றி கோபத்தில் கொந்தளிக்கின்றனர். 

குறிஞ்சிப்பாடி தொகுதியில் கைலி நெசவுதான் மிகப்பெரிய தொழில். இப்போது நாங்களே கைலியை நெசவு செய்யாமல் கடையில் வாங்கி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கோம் என்றால் அதற்கு காரணம் அந்த  வேட்பாளர் குடும்பம் தான் என்று குண்டை தூக்கிபோட்டனர். இங்கு, திட்டக்குடி தவிர்த்து மற்ற தொகுதிகளில் எல்லாம் முந்திரி பயிரிட்டுள்ள கிராமங்கள்தான். பல லட்சம் குடும்பங்கள் முந்திரியை பயிரிட்டுள்ளன. முந்திரி விலை அதிகரித்தால்தான் விவசாயிகளிடம் காசு புழக்கத்தில் இருக்கும், அதை சார்ந்த எங்கள் கைலி நெசவும் செழிப்பாகும்.

எப்போது இந்த குடும்பம் தலை தூக்கி முந்திரி தொழிலையே கைப்பற்றியதோ அப்போதிலிருந்தே முந்திரிக்கு உரிய விலை கிடைப்பதே குதிரைக்கொம்புதான். இவர்கள் வைத்ததுதான் சட்டம், இவர்கள் வைத்ததுதான் முந்திரிவிலை. இங்கு ஒருவேளை முந்திரி விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் இருப்பு வைத்து விற்போம் என்று நினைத்தால் வியட்னாமில் இருந்தோ இந்தோனிஷியாவில் இருந்தோ இறக்குமதி பண்ணி விவசாயிகளை அழ வைத்துவிடும் எமகாதகர்கள் அந்த வேட்பாளர் குடும்பத்து ஆட்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

முந்திரி 15 ஆண்டுகளுக்கு பின் தான் காய்ப்பு அதிகமாகும். 15 வருசம் 20 வருசம் வளர்த்த மரத்தை அழிச்சிட்டு வேற விவசாயம் பண்ண இங்குள்ள விவசாயிகள் தயங்குவதால் இவர்கள் காட்டில் அடை மழை. யாரால் இந்த பகுதி மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனரோ, காசு இருக்கு என்பதால் அவருக்கே சீட்டை கொடுத்து பாரம்பரியமான கட்சிகாரங்களையே திகைக்க வைத்துவிட்டதாம் கட்சி தலைமை. கட்சிக்காரர்கள் ஒட்டு போடுவார்களா என்பதே சந்தேகம் தான் என்பதால் இங்கே தேறுவது கடினம் என்கிறார்கள். 

இது ஒருபக்கம் இருக்க வேட்பாளாராக இந்த பகுதியில் பெரும் செல்வாக்குப்பெற்ற, முன்னாள் அமைச்சர் மகன் தான் அறிவிக்கப்படுவார் என்று எண்ணியிருந்த நிலையில், மக்களிடையே பெருமளவு அதிருப்திக்குள்ளான ஒருவரை வேட்பாளராக்கியது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனை விட அதிர்ச்சியான விஷயம் கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் வைட்டமினை வேட்பாளரிடமிருந்து கறக்கவே முடியவில்லையாம். 

போதாகுறைக்கு அக்கட்சி தலைவரின் பேச்சு வேறு தொடர்ந்து அங்கே வாழும் பெரும்பாண்மை சமூக மக்களை அவமதிக்கும்படியாக செல்வதால் பெரும் புகைச்சலையே ஏற்படுத்திவருகின்றது. இதெல்லாம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர் முன்னின்று தேர்தல் பணி செய்த அனுபவம் இல்லாதவர் என்பதால் நொந்து போயுள்ளார் வேட்பளார்,  நம்பி சீட் கொடுத்த தலைமையோ, கடலூர் மாவட்ட தலைமையை ஓரங்கட்ட, சீட் வாங்கி கொடுத்த விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட தலைமையிடம் ஒரு பாய்ச்சல் பாய்ந்துள்ளதாம். 

வேட்பாளர்களில் ஒருவர் தொழிலதிபர், இன்னொருவர் மருத்துவர் இதில் யார்? எந்த கட்சி என்பது உங்கள் சிந்தனைக்கே! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore mp constituency


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->