சீர்திருத்தம் என்ற பெயரில் மிகப்பெரிய சீரழிவு! மத்திய அரசுக்கு அன்புமணி கண்டனம்! - Seithipunal
Seithipunal


மத்திய மற்றும் மாநில அரசு நிர்வாகங்களின் தூணாக விளங்கக்கூடிய குடிமைப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஒதுக்கீட்டு முறையில் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் தலைவர்களிடம் கருத்துக்களைக் கேட்டிருக்கிறது. இந்திய அரசு நிர்வாகத்தை சீரழிக்கக் கூடிய மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையானது, அகில இந்திய அளவிலான இ.ஆ.ப., இ.கா.ப. உள்ளிட்ட 23 வகையான பணிகள் குடிமைப்பணிகள்  என்று அழைக்கப்படுகின்றனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இப்பணிகள்  ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இந்த முறையை மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய முறைப்படி குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் முசோரி நகரில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சிக் கழகத்தில் அடிப்படை நிர்வாகப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறை மிகவும் ஆபத்தானது என்பது தான் பெரும்பான்மையினரின் கருத்து ஆகும்.

குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய இப்போது கடைபிடிக்கப் பட்டு வரும் முறை தான் மிகச்சிறந்த முறையாகும். இந்த முறையில் தவறுகளோ, முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பில்லை. இந்த முறையை மாற்ற வேண்டும் என்று இதுவரை யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்த முறையை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு துடிப்பது ஏன்? ஒருவேளை நிர்வாகத்திறனை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கருதினால்,  அதுகுறித்து வல்லுனர்களிடம் கருத்துக் கேட்டு அதனடிப்படையில் தான் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாறாக, மத்திய அரசு அதன் முடிவைத் திணித்தால் அது சீர்திருத்தமாக இருக்காது... மாறாக சீரழிவாகவே இருக்கும். மத்திய அரசு இப்போது செய்திருப்பது இரண்டாவது வகை ஆகும்.

குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் தரவரிசைப்படி பணி ஒதுக்காமல்,  அடிப்படை பயிற்சியில் பெற்ற மதிப்பெண்களின்படி பணி ஒதுக்கப்பட்டால் அது மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளும், நேர்காணல்களும் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நடைபெறுகின்றன. அதனால், அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தர வரிசை தான் சரியானதாக இருக்கும். மாறாக பயிற்சியின் போது வழங்கப்படும் மதிப்பெண் நேர்மையானதாக இருக்காது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரிகளின் வாரிசுகள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அடிப்படை பயிற்சி வழங்கி தரவரிசையை தயாரிக்கப் போகிறவர்களும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தான். அவ்வாறு இருக்கும் போது குடிமைப்பணி அதிகாரிகளின் வாரிசுகளுக்கு அதிக மதிப்பெண் வழங்கி, அவர்கள் குறைந்த தர வரிசை பெற்றிருந்தாலும் கூட அவர்களுக்கு  இ.ஆ.ப., இ.கா.ப போன்ற முதல் வரிசை பணிகள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நடந்தால் அது குடிமைப் பணிகளுக்கான தேர்வு முறையையே முற்றிலுமாக சிதைத்து விடும். இதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இதற்கெல்லாம் மேலாக மத்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் மற்றொரு பெரிய சதித்திட்டமும் இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது. இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அதிகம் பேர் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையை மாற்றி வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இத்தகைய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்குமோ என்ற ஐயம் அர்த்தமுள்ளதாகும்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இந்திய அரசு நிர்வாகத்தில் முழுக்க முழுக்க தங்களுக்கு சாதகமானவர்களை திணிக்கும் வகையில் குடிமைப் பணிகள் கட்டமைப்பை மத்திய அரசு சிதைக்கிறது. இது அனுமதிக்கப்பட்டால்  அடுத்தடுத்தக் கட்டங்களில் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளிலும் மத்திய ஆட்சியாளர்கள் அவர்களின் சித்தாந்தங்களை திணிக்கக்கூடும். அதைத் தடுக்க வேண்டுமானால் முதல்கட்டமாக குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் செய்யும் மத்திய அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக நாடு முழுவதும் உள்ள ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்ட சக்திகள் அனைவரும் உரக்க குரல் கொடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

civil services exam procedure is not correct


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->