காவிரி மேற்பார்வை வாரியம் மிகப்பெரிய மோசடி - மருத்துவர் இராமதாசு! - Seithipunal
Seithipunal


காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாற்றாக காவிரி மேற்பார்வை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் மத்திய அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையானது,
காவிரி மேற்பார்வை வாரியம் என்பதே தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான மோசடியான அமைப்பு ஆகும். காவிரியில் கிடைக்கும் நீரை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் எந்த அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருக்கும்  காவிரி நடுவர் மன்றம், அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்காகத் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் ஆணையிட்டிருந்தது.

cauvery க்கான பட முடிவு

இதன்மூலம் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மேலாண்மை வாரியம் எடுத்துக் கொள்ளும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் நான்கு மாநிலங்களுக்கும் இந்த அமைப்பே தண்ணீரை பகிர்ந்து வழங்கும்; போதிய அளவு தண்ணீர் இல்லாத காலங்களில் இடர்ப்பாட்டுக்கால நீர்ப்பகிர்வுத் திட்டத்தின்படி இருக்கும் நீரை விகிதாச்சார முறையில் பகிர்ந்து வழங்கும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தண்ணீருக்காக கர்நாடகத்திடம் கையேந்தத் தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி நடுவர் மன்றம் ஆணையிட்டதன் நோக்கமே இது தான்.

cauvery க்கான பட முடிவு

ஆனால், மத்திய அரசு அமைக்க தீர்மானித்திருப்பது மேற்பார்வை வாரியம். அது நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது. மாறாக மேற்பார்வை மட்டுமே செய்யும். அப்படியானால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை யார் செயல்படுத்துவார்கள்? காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அமைந்துள்ள கர்நாடக அரசு தான் செயல்படுத்தும். காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்குவதில்லை; அதன் தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது என்பது தான் நூறாண்டுகளுக்கும் மேலாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாற்று ஆகும். இதற்கு எதிராகத் தான் தமிழக அரசும், உழவர்களும்  கடுமையாகப் போராடி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை கர்நாடக அரசே செயல்படுத்தும் என்பது அர்த்தமற்றது; அது எக்காலத்திலும் நடக்காதது.  தமிழகத்தின் நூற்றாண்டு காலப் போராட்டத்தை பயனற்றதாக்கி, காவிரிப் பிரச்சினையை தொடங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்துவதற்குத் தான் மத்திய அரசின் இம்முடிவு வகை செய்யும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்தாவிட்டால், மேற்பார்வை வாரியம் தலையிட்டு சரி செய்யும் என்று மத்திய அரசின் சார்பில் வாதிடப்படலாம். ஆனால், அது கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்து பிடிப்பதற்கு ஒப்பானதாகத் தான் அமையும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மேலாண்மை வாரியம் தான் செயல்படுத்த வேண்டும் என்று நடுவர் மன்றம் ஆணையிட்டுள்ள  நிலையில், அந்த அதிகாரத்தை கர்நாடகத்திடம் தாரை வார்த்து விட்டு, கர்நாடகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவோம் என்பது ஏமாற்று வேலை; தமிழகத்தை ஏமாற்றவே இவ்வாறு செய்யப்படுகிறது.

cauvery pmk protest க்கான பட முடிவு

காவிரி மேற்பார்வை வாரியம் புதிதாக வந்த அமைப்பு அல்ல. மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வைக் குழு ஒன்றை அமைத்து கடந்த 10.05.2013 அன்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லை. தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகிய நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கடந்த காலங்களில் தமிழகம் கோரிய போது,  காவிரி மேற்பார்வைக் குழுவால் எதையும் செய்ய முடியவில்லை. இப்போது மத்திய அரசு அமைக்கத் துடிக்கும் காவிரி மேற்பார்வை வாரியமும் அதே போன்ற பொம்மை அமைப்பாகத் தான் இருக்கும்.

cauvery pmk protest க்கான பட முடிவு

நூறாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் தான். எனவே, தமிழகம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு தரப்பையும் திருப்திப்படுத்தும்   வகையில் பொம்மை அமைப்பை ஏற்படுத்துவதை விடுத்து, காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என தனது அறிக்கையில் மருத்துவர் ராமதாசு தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cauvery supervising committee is not a solution


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->