ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் மாலை அணியும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை! - Seithipunal
Seithipunal


சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் மாலை அணியும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம். 

சபரிமலைக்குக் கிளம்பிச் செல்கையில், எரிமேலியில் (பேட்டைத்துள்ளல்), பம்பையில் விளக்கேற்றி வழிபடும் நிகழ்வு, அன்னதானம் கொடுக்கும் பணிகளில் கன்னிசாமிகள் தவறாமல் பங்குகொள்ள வேண்டும்.

இருமுடி ஏந்திக்கொண்டு செல்லும் ஐயப்ப பக்தர்கள், வழியில் வீண் பேச்சு பேசக்கூடாது. குழுவாக பயணம் செல்லும்போது அனைவரோடும் ஒத்துழைக்கவேண்டும். முடிந்த வரையில் சுற்றுலாபோல் செல்லாமல், நேராக சபரிமலைக்குச் சென்று திரும்புவது நலம். இவற்றைக் கடைப்பிடித்தால் அய்யன் அருள் என்றும் உண்டு.

தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பின் இருமுடிக்கு பூஜை செய்து அதன் பிறகுதான் மாலையை கழற்ற வேண்டும். இடையிலேயே கழற்றக்கூடாது. குறிப்பாக குளிக்கும்போது கூட மாலையை கழற்றக்கூடாது.

பெண்களை மனதளவிலும் தவறாக எண்ணக்கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டுவிலக்காகும் பட்சத்தில், வெளியில் மாலை அணிந்த ஒருவரின் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் அல்லது தனியறையில் அவர்கள் பார்வையில் படாதவாறு தங்கிக்கொள்ளலாம். 

விரத காலத்தின்போது குடிப்பழக்கம், செருப்பு அணிவது, அசைவம் உண்ணுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புகைப்பிடித்தல், சவரம் செய்வது, முடிவெட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த ஒரு மண்டல காலத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், பின்னர் அதுவே நாம் தவறான பழக்கங்களை விட்டுவிடுவதற்கு உதவியாக இருக்கும்.

வீட்டின் அருகில் நடக்கும் ஐயப்ப பூஜைகளில் கலந்துகொண்டு சேவை செய்யலாம். 'அன்னதானம்" தரும் நிகழ்வுகளிலும் ஐயப்பமார்கள் உதவி செய்வது நல்லதொரு பாக்கியம்.

சபரிமலைக்கு மாலை அணிந்துகொள்ளும் சாமிகள் கருப்பு நிற அரைஞாண் கயிறு, கையிலும் கழுத்திலும் கருப்பு நிறக் கயிறு ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது. கருப்பு, நீலம், காவி, பச்சைநிறத்தில் அமைந்த மேல் ஆடைகளையும், வேஷ்டிகளையும் உடுத்தலாம்.

கன்னிசாமிகள் மலைக்குக் கிளம்பும்போது, அவர்களின் குருசாமியின் தலைமையில் வீட்டிலேயே ஐயப்பனுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கவேண்டும். இந்த அன்னதானத்தில் ஐயப்பன் மனிதரூபத்தில் கலந்துகொள்வார் என்பது ஐதீகம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimala iyyappan temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->