இனி காவிரி ஒரு காலத்தில் தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்ட ஆறாகவே நினைவுகூரப்படும்.. கர்நாடகம் எடுத்த விபரீத முடிவு..!! - Seithipunal
Seithipunal


காவிரியை நம்பி இனித் தமிழ்நாட்டில் ஒருபோகம்கூட உழவு செய்ய முடியாது என்பது இப்பொழுது இறுதியாக உறுதியாகி உள்ளது.

நடுவர் மன்றத் தீர்ப்பு உட்பட எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் ஏற்றுச் செயல்படுத்தியதில்லை. உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தரமுடியாது என்று சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானமே நிறைவேற்றிய மாநிலம் அது.

எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் மைய அரசு கர்நாடகத்திற்கு எந்த அழுத்தமும் எப்பொழுதும் தந்ததில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிழில் வெளியிட மைய அரசு செய்த இழுத்தடிப்பை எப்படி மறப்பது? மேலாண்மை வாரியத்தில் அது மாற்றி மாற்றிப் ' பல்டி' அடித்ததே!

இப்பொழுதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அது உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைத்துவிடும் என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. வாரியம் அமைக்க விடமாட்டோம் என ஏற்கனவே சித்தராமையா சூளுரைத்துவிட்டார்.

ஒருவேளை மேலாண்மை வாரியம் அமைந்துவிட்டாலும் அதற்கான அதிகாரம் பற்றிய தெளிவும் இல்லை. கிருஷ்ணா நதிநீர் வாரியத்தின் முன்னாள் தலைவர் அறம்வளர்த்தநாதன் அணைகள் அனைத்தும் வாரியத்தின்கீழ் வராவிட்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்.

உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கான பங்கைக் குறைத்து தமிழ்நாட்டிற்கான பங்கைக் கூட்டித் தீர்ப்பு வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? கர்நாடகத்தில் பெருங்கலவரம் வெடித்திருக்கும், தமிழர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள், ஏதிலிகளாகத் தமிழகத்திற்கு ஓடிவந்திருப்பார்கள். ஆனால் தமிழகம் அமைதி காக்கிறது.

இங்குள்ள அரசியல் கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்டதோடு வேறு பணிக்குச் சென்றுவிட்டன. ஆண்ட திமுக, அம்மா அதிமுக, அம்மா இல்லா அதிமுக ஆகியன பதவிக்காகக் காவிரியை என்ன ஒட்டுமொத்தத் தமிழகததையே காவுகொடுக்க அணியமாய் இருப்பவர்கள்.

காவிரிச் சிக்கலில் இரண்டுமே இரண்டகம் செய்துள்ளன. ஆற்றுநீர்ச் சிக்கலில் பொதுவுடைமைக் கட்சிகள் இதுவரை தமிழர் நலன்சார்ந்து தீவிரமான போராட்டங்களை எடுக்கவில்லை, இனி எடுப்பதற்கான அறிகுறிகளையும் காணோம்.

தமிழ்த்தேசிய அமைப்புகளிடம் மைய அரசுக்கு நெருக்கடி தரும் போராட்டங்களை முன்னெடுக்கும் வலு இல்லை.

ஆக இனி காவிரி ஒரு காலத்தில் தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்ட ஆறாகவே நினைவுகூரப்படும் என்று தெரிகிறது.

எதிர்காலத்தில் எம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் எப்பொழுதோ " நடந்தாய் வாழி காவேரி" எனப் பாடப்பட்ட காவேரி நடந்ததற்காகனத் தடயங்களைத் தேடி அலைவார்கள் அவர்களின் முன்னோர்களான நம்மைத் தூற்றியபடியே.

SOURCE: கலை வேலு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka govt opens cauvery water.?


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->