பொன்பரப்பி கலவரத்தின் தொடக்கப்புள்ளி யார் தெரியுமா? மாறுபட்ட கோணத்தில், வெளியான பரபரப்பு தகவல்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சம்பவம் பொன்பரப்பி சம்பவம் தான்.  இந்த சம்பவம் தொடர்பாக உண்மையான முழு தகவல் கிடைக்கும் முன்பே, ஊடகங்களும், சமூக வலைதளங்களும், முற்போக்குவாதிகளும், பிற்போக்குவாதிகளும், சாதிய ஒழிப்பு போராளிகளும்  தங்களுடைய பொங்கல்களை, சாதிவெறியர்கள், அடக்குமுறைகள் என வசனங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்கள்.

யாருமே அங்கு என்ன நடந்தது? எதனால் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதனை ஆராய்ந்து அலசி பார்க்கவோ விருப்பப்படவில்லை. நேரடியாக  சாதி வெறி தாக்குதல், ஆதிக்கவாதிகளின் கொடூர தாக்குதல் என வரிசையாக பெயர் சூட்டப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. 

இதில் விசித்திரம் என்னவென்றால் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வாக்குபதிவு நடைபெற்ற போது தமிழகத்தின் பல இடங்களில் இரு தரப்பினர் இடையே முட்டலும் மோதலும்  இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் கட்சிகள் பிரதான படுத்தப்பட்ட நிலையில் இந்த பொன்பரப்பில் மட்டும்தான் சாதியை பிரதானப்படுத்தி ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற கலவரங்கள், விதிகள் மீறல் உள்ளிட்ட வழக்குகளை ஆராய்ந்து பார்த்தால், தேர்தல் ஆணையத்தின் கணக்குப் படி அதிகபட்சமாக  தெற்கு மண்டலத்திலும் 2661, மத்திய மண்டலத்தில் 712, மேற்கு மண்டலத்தில் (941) தான் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த பொன்பரப்பி சம்பவம் நடைபெற்ற வடக்கு மண்டலத்தில், மற்ற இடங்களில் பதிவான வழக்குகளை விட மிக மிக குறைவாக 376 வழக்குகளை மட்டுமே தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எப்போதும் இல்லாத வகையில் வட தமிழகத்தில், தமிழகத்தில் மற்ற இடங்களில் ஒப்பிடும்போது மிகவும் அமைதியாக தேர்தல் நடைபெற்ற நிலையில், மற்ற இடங்களில் எல்லாம் எவ்வளவு கலவரங்கள் நடந்தும், ஏன் கொலை கூட நடந்தும், அங்கே எல்லாம் முக்கியத்துவம் பெறாத செய்தியானது பொன்பரப்பியில் மட்டும் முக்கியத்துவம் பெற்றது. அதற்கு ஒரே காரணம் அதில் தொடர்புடையவர்கள் வன்னியர்கள்.

முதலில் இந்த சம்பவமானது நடைபெறுவதற்கான காரணம் என்ன என்று விசாரித்ததில், அங்கே வன்னியர்கள் வசிக்கும் பகுதியில் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கே கடையில் உள்ள மாற்றுத்திறனாளியை விசிகவின் சின்னமான பானைக்கு வாக்களிக்க வலியுறுத்தி  தாக்கியுள்ளார்கள். அதற்கு பதிலாக அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் மக்கள் பானையை தெருவில் உடைத்துள்ளார்கள். அதன்பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்ற வன்னியர் முதியவர் ஒருவரையும், அவருடன் சென்ற இளைஞரையும் அடித்து பீர்பாட்டிலால் குத்தி உள்ளார்கள்.

படம் : விசிகவினரால் தாக்கப்பட்ட வன்னியர்கள் 

இதனையடுத்து தான் இந்த தகவல் வன்னியர் கிராம மக்களுக்கு தெரியவர, அந்த முதியவரை தாக்கியவர்களை தேடி செல்ல, அவர்கள் தாழ்த்தபட்ட மக்கள் வசிக்கும் பகுதியில்  ஒளிந்து கொள்ள அங்கே நடந்தவை தான் நீங்கள் வீடியோவாக பார்த்தது. இந்த சம்பவம் தேவைதானா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர்கள் விருப்பம், இங்கே விருப்பம் இல்லாத ஒருவரை பானைக்கு வாக்களிக்க வற்புறுத்தியது தான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி. ஆனால் இதனை எந்த முற்போக்கு வாதிகளும், சாதி ஒழிப்பு போராளிகளும் கண்டுகொள்ளவே இல்லை.

பானைக்கு வாக்கு கேட்டு திமுகவை சார்ந்த வன்னியர்களையே நிர்பந்திக்க வேண்டிய கட்டாயத்தில் தான் விசிக இந்த தொகுதியில் உள்ளது என்பது தான் கள நிலவரம்.  இந்த தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் தொகுதி என்பதால் இந்த தொகுதியை தொடர்ந்து தேர்ந்தெடுத்து போட்டியிட்டு வருகிறார்.

படம் : வன்னியர்களால் தாக்கப்பட்ட பொன்பரப்பி கிராமம்

இந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்ட பின்னர், தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இங்கே வாழும் அனைத்து சமுதாய மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நிற்கும் இதே தொல் திருமாவளவன்  தான். கடந்த 2009 இல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவரிடம்  இருந்த பிம்பம் என்பது வேறு, அப்பொழுது அவர் தலித் சமுதாயத்தின் கட்சியை சார்ந்த தலைவர் என்பதையும் தாண்டி, இலங்கை தமிழர் உள்ளிட்ட பிரச்சனைகளில் குரல் கொடுத்து வரும் ஒரு தமிழ் போராளியாகத்தான் அவரை மக்கள் அனைவரும் பார்த்து அவருக்கு வாக்களித்தார்கள். அவரும் பெரிய வெற்றி பெற்றார்.

ஆனால் காலப்போக்கில் அவரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவுடன் சென்று கை குலுக்கிக் கொண்டு வந்தார். அதோடு இல்லாமல் இப்பகுதி மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அவருடைய கட்சிக்காரர்கள் செயல்பாடானது இருந்தது. அதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதுவரை இங்கே வன்னியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே இல்லாமல், மற்ற சமுதாயங்களும் இணக்கமாகவே  இருந்த நிலையில், திருமாவளவன் வெற்றிக்கு பின்னர், 2009 - 2014 காலகட்டத்தில் தான், பிரிவினைகள் வேறுபாடுகள் மோதல்கள் அதிகமாக உருவானது. 

ஏனெனில் அப்பொழுது தவறு செய்து சிறைக்கு செல்லும் தங்களது கட்சியினரை அக்கட்சி நிர்வாகிகள் தங்கள் செல்வாக்கினால் உடனடியாக மீட்டு வந்து விடுகின்றனர். மேலும் சட்டமும் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் பிற சாதியினர் மீது வன்கொடுமை வழக்கையும் எளிதாக போட்டு விடுகின்றனர். இதனால் பல சமுதாய மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தவறு செய்தவர்கள் ஒருபுறமிருக்க தவறு செய்யாதவர்கள் மீது வன்கொடுமை வழக்கா? என்று கொதித்துப் போயினர்.

படம் : விசிகவினரால் தாக்கபட்ட செய்தியாளர் 

அதோடு இல்லாமல் பல ஊர்களில் இளம்பெண்களை காதல் என்ற பெயரில் திருமணம் செய்து பிறகு வரதட்சணை கொடுமை செய்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிற சாதியினரும், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலேயே இனிமேல் திருமாவளவன் வந்தால் அது சரிப்பட்டு வராது என்று இதே திமுக கூட்டணியில் அவரை தோற்கடித்தனர்.

அப்போதே அவரை  பிற சாதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை நிரூபிக்கும் விதமாக அடுத்த தேர்தல் அமைந்தது.  திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்த திருமாவளவன் 2016ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி சார்பாக இதே சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்பொழுது அவர் அந்த கூட்டணி சார்பாக நின்று 49 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். ஆனால் அதே திருமாவளவன் 2014 சட்டமன்ற தேர்தலில் திமுக இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுக்கூடி போட்டியிட்ட போது அவர் பெற்ற வாக்குகள் 58000 மட்டுமே. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அவருடைய சமுதாயம் சார்ந்த வாக்குகள் மட்டுமே திருமாவளவனுக்கு பெருமளவில் கிடைத்து வருகிறது. மாறாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதே 2016 தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 38000 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிற சமுதாயங்கள் ஆதரிக்க மறுக்கும் அதே திருமாவளவனை மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வைத்தது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சூழ்ச்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இரண்டு சீட்டுகளை கொடுத்து அதில் ஒரு சீட்டை திமுக தன்பெயரில் வைத்துக் கொண்டு ஒன்றை மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஒதுக்கியது. சிதம்பரம் தொகுதியில், திமுக மட்டுமல்ல மற்ற கட்சியிலும் தலித் அல்லாத பிற சமுதாயத்தினர் திருமாவளவனை ஆதரிக்க மறுக்கும் நிலையில், தொகுதியினை திருமாவளவனுக்கு ஒதுக்கியதே திமுக செய்த மிகப்பெரிய தவறாகும்.

ஏனெனில் அவரை யாரும் ஏற்றுக் கொள்ளாத போது அவருக்கு இந்த தொகுதியில் சீட்டு வழங்கியதால் பிற சமுதாயத்தினர் இடையே மோதல் தான் உருவாகும் என்பதை திமுக முன்கூட்டியே நிச்சயமாக அறிந்திருக்காமல் இல்லை. அவர்களது தேவையும் அதுதானோ என்னவோ?  வட தமிழகத்திலேயே 13 தொகுதிகளில் போட்டியிடும் திமுக விற்கு முழுவதுமாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் வாக்குகள் கிடைக்க வேண்டும்  என்பது தான் திமுகவின் கணக்கு. ஆனால் தேர்தல் முடியும் வரை சிதம்பரம் தொகுதி உட்பட வட தமிழகத்தில் பெரிதாக எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்ணியமாக நடந்து கொண்டு சென்று விட்டார்கள்.

தங்கள் கட்சியினர் கூட விரும்பாத ஒரு கூட்டணியை தான் திராவிட முன்னேற்ற கழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் வைத்துக் கொண்டது. திமுகவில் உள்ள தலித் அல்லாத சமுதாயத்தினர் இந்த கூட்டணிக்கு வரவேற்பு அளிக்கவே இல்லை. கூடவே வாக்கு கேட்க கூட பலரும் செல்லவில்லை என்பதுதான் உண்மையான கள நிலவரம். மேலும் எந்த ஊரிலும், யாருக்கு வாக்களித்தீர்கள் என்று திமுகவினரிடம்  கேட்டால் கூட அவர்கள் நாங்கள் பானைக்கு வாக்களிக்க வில்லை என்பது தான் பதிலாக கூறுகிறார்கள். ஏனெனில் அந்த அளவில் தான் திருமாவளவன் கட்சியினரின் நடவடிக்கைகள் அந்த தொகுதியில் இருந்து கொண்டிருக்கிறது.

கடந்த முறையே திருமாவளவனை ஆதரிக்காத பிற சாதி மக்கள் எப்படி திருமாவளவனை ஆதரிப்பார்கள், அதுவும் குறிப்பாக கடந்த 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலும் திமுகவினர் இந்த கூட்டணியை விரும்பாமல் பானை சின்னத்திற்கு வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறுகிறார்கள். விருப்பமே இல்லாத பட்சத்தில் வற்புறுத்தி வந்து வாக்குக் கேட்கும் நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செயல்பட்டனர்.

கடந்த கால சம்பவங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதே, திருமாவளவன் சொந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஆலத்தியூர் கிராமத்தில் ஒரு துக்க காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வலுக்கட்டாயமாக நாங்கள் சென்று தான் தீருவோம் என்று பிரச்சாரம் செய்த திருமாவளவனின் அடாவடித்தனமும் மக்கள் விரும்ப தகுந்ததாக இல்லை. முகம் சுழிக்க கூடிய அளவிலேயே இருந்தது. அதோடு இல்லாமல் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த ஊரைச் சேர்ந்த அதிமுகவினர் 30 பேர் மீது வன்கொடுமை வழக்கும் போடப்பட்டது.

(முழு தகவலையும் படிக்க : http://bit.ly/2Il0zmv )

இங்கே போட்டியிடுவது விசிக மற்றும் அதிமுக, சண்டைகள் வந்தது குறிப்பிட்ட கிராம வன்னியர்களிடம், ஆனால் இதில் சம்பந்தமே இல்லாத பாட்டாளி மக்கள் கட்சியையும்,  ஒட்டுமொத்த வன்னியர்களையும் குற்றவாளிகளாக, ஊடகங்களும், சமூக வலைதளங்களும், முற்போக்கு, பிற்போக்கு, சாதிய ஒழிப்பு போராளிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பிரச்சினைகளெல்லாம் வருவதற்கு மூல காரணமே மக்கள் துளியும் விரும்பாத திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி தான் என்றும் அதனை விட பெரிய காரணம், திருமாவளவன் இந்த தொகுதியில் போட்டியிட்டது தான்.

பிற சாதியினர் யாருமே விரும்பாத ஒருவரை இங்கே நிறுத்தி சாதிக் கலவரங்களை உருவாக முதல் காரணமாக அமைந்ததே திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதோடு இல்லாமல் தேர்தல் வரை வன்னியர், வன்னியர், வன்னியர் என்று கூறி வாக்குகளை கேட்ட திமுக தலைவர்  மு க ஸ்டாலின் தேர்தல் முடிந்த அடுத்த நாளே தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற ஒரு சார்பு நிலையை மீண்டும் கையில் எடுக்கத் துவங்கி விட்டார். எங்கே யார் பாதிக்கப்பட்டது எதனால் பிரச்சினை என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க விரும்பாத ஸ்டாலின் நேரடியாக சாதிவெறி, ஆணவ தாக்குதல் என தனது வழக்கமான வன்னியர் எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துவிட்டார்.

தமிழகத்தில் மற்ற பகுதிகள் எல்லாம் எப்படியோ ஆனால் சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை அதுவும் திருமாவளவன் களத்தில் நிற்கும் வரை இந்த தொகுதி சாதி அடிப்படையிலான தொகுதியாக தான் இருக்கும் என்பதையே களநிலவரம் காட்டுகிறது. சிதம்பரம் தொகுதி தொடர்ந்து ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக தனி  தொகுதியாகவே இருந்து வருகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி கூட இந்த தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும்  தலித்துகள்தான் அதிலும் குறிப்பாக முதல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான தலித் எழில்மலை, பொன்னுசாமிக்கு தங்களுக்கு கிடைத்த முதல் இரண்டு மத்திய அமைச்சர் பதவிகளை கொடுத்து அமைச்சர்களின் தொகுதி என்ற பெருமையை சிதம்பரம் தொகுதிக்கு பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்துள்ளது.

அதோடு இல்லாமல் கடந்த முறை வென்ற அதிமுக வேட்பாளரும் தலித் தான். தற்போது போட்டியிடுபவரும் தலித் தான். அவர்களை எல்லாம் ஏற்றுக் கொண்ட மக்கள் திருமாவளவனை மட்டும் ஏற்றுக் கொள்ளாதது அவர்களுடைய கட்சியினுடைய அடாவடித்தனமும், அட்டகாசமும் தான் என்பது அனைவருமே ஒருங்கே எதிரொலிக்கும் கூற்றாக உள்ளது. கடந்த கால செய்லபாடுகள் இந்தத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும், பானை தேறுவது கடினம் தான் என்பது மக்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் பதில் மே 23 அன்று தான் கிடைக்க வரும். சாதிகளை தாண்டி திருமாவளவன் வெல்வாரா? இந்த தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவாரா? இல்லையோ? தலித்துகள் மற்றும் பிற சாதி  மக்களின் இடையே வேறுபாடுகள் அதிகரித்ததுதான் இந்த தொகுதியில் நடைபெற்ற துயரமான நிகழ்வாக உள்ளது. 

இந்த சம்பவத்தில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் நிறுவனர் டாக்டர் ராமதாசும் தான். ஏனெனில் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத அவர்களை தான் சாதியவாதிகள், சாதிவெறியர்கள் என முற்போக்குவாதிகள், சாதி ஒழிப்புப் போராளிகள், பெரியாரிஸ்டுகள் என அனைவராலும் குற்றம்  சாட்டப்படுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளும் பாட்டாளி மக்கள் கட்சியை  குறிவைத்தே விமர்சன கணைகளை தொடுத்து வருகின்றனர். ஆனால் திருமாவளவன் பாமக நேரடியாக மோதினால் பதற்றமான சூழல் உண்டாகலாம் என்பதாலே, இந்த தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றாலும், கடந்த இரண்டு முறையும் குறைவான வாக்குகளிலேயே தோல்வியை தழுவி இருந்தும் மீண்டும் நிற்காமல் கூட்டணிக் கட்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி இந்த தொகுதியை கொடுத்துவிட்டு விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதே சிதம்பரம் தொகுதியில் பல இடங்களில் வன்னியர்களும் ஆதிதிராவிடர் மக்களும் ஒரே பூத்தில் வாக்களிக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், அமைதியாக ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, நீங்கள் முன்னே சென்று வாக்களியுங்கள், நீங்கள் முன்னே சென்று வாக்களியுங்கள் என்று இரண்டு சமுதாயங்களும் வாக்களித்த இடங்களும் இருக்கத்தான் செய்கிறது. எங்கேயாவது ஓரிரு இடங்களில் நடைபெறும் இது போன்ற அசம்பாவித சம்பவங்களை ஊதி பெரிதாக்கி இரு சமூகங்களிடையே மிகப்பெரிய கலவரத்தை உண்டு பண்ணுவதே இந்த முற்போக்கு வாதிகளின், சாதி ஒழிப்புப் போராளிகளின் பணியாக இருக்கிறது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. அவ்வாறு கூறிக்கொள்ளும் யாருமே வட தமிழக மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்தவர்களா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் சார்ந்த தலைமைக்கு சாதகமாக அமையும்படி பஞ்சாயத்து என்ற பெயரில் வேண்டாத வெறுப்புகளையும், தொடர் வன்முறைகளுக்கும் அவர்கள் வழி ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.

மேலும் இந்த சம்பவத்தில் உடனடியாக களமிறங்கிய திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் வன்னியர் சமுதாயத்தினர் மீது வன்கொடுமை வழக்குகளை உடனடியாக பதிய வேண்டும் எனக் கூறியதாகவும் ஒரு தகவல் பரவுகிறது. மேலும் கலவரம் முடிந்த பின்பு எடுக்கப்பட்ட வீடியோக்களில் காயம் இல்லாமல் நலமுடன் இருக்கும் பலர் அடுத்த நாள், அங்கே சென்ற உண்மை கண்டறியும் குழு, முற்போக்கு, பிற்போக்கு, சாதி ஒழிப்பு குழு என அனைவரும் சென்று பார்த்த போது அவர்களை செட்டப் செய்து தலையில் கட்டு, கையில் கட்டு, காலில் கட்டு எனவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட காயங்களுடனும் காட்சியளித்தது தற்போது ஆதாரங்களுடன் வெளிவரத் துவங்கி உள்ளது. இது திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது . ஏனெனில் அவர்கள் போட்ட நாடகமானது அம்பலமாகி வருகிறது.

படம் : நலமுடன் இருப்பவரை காயமடைந்ததாக சித்தரிக்கும் விசிக திமுகவினர் 

கலவரம் முடிந்த பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நலமுடன் இருக்கும் பலர் அடுத்த நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது போல இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக தான் இந்த முற்போக்கு இருந்து வருகிறார்கள் என்பதனை தற்போது வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது. மேலும் திருமாவளவன், சிவசங்கரன் சென்றபோது நலமுடன் அங்கிருந்தவர்கள் அடுத்த நாள் கட்டுடன் இருந்தது  எப்படி என்ற கேள்விகளும் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது. இந்த கூட்டு நாடகத்தில் திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன என்பது தற்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது. அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.  இதனால் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் வட்டாரங்கள் அதிர்ச்சியுடன் தான் உள்ளன.

எப்பொழுதும் ஊடகங்களும் தங்களுடைய பரபரப்புக்காக அரசியல் கட்சிகளைப் போலவே ஒருதலை பட்சமாக நிற்பார்கள் என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் இந்த முறை அரியலூர் மாவட்ட ஊடகவியலாளர்கள் அவ்வாறு இல்லை. ஏனெனில் கலவரம் நடந்த இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கி உள்ளனர்.  இது தான் அவர்களுக்கு பின்னடைவாக அமைந்து போனது. இல்லை என்றால் இந்த சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்த நாடகங்கள் வெளியே வராமலேயே போயிருக்கும்.

(முழு தகவலுக்கு : http://bit.ly/2Vag4nD)

படம் : விசிகவினருக்கு எதிராக போராடும் அரியலூர் மாவட்ட செய்தியாளர்கள்  

மேலும் தமிழகத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தாலும் இந்த குறிப்பிட்ட கலவரத்தை மட்டும் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரும் வன்னியர் ஆதிதிராவிடர் மோதலைதான் எதிர்பார்க்கிறார் போல, அப்போதுதான் அவருடைய அரசியல் நிலைக்கும் என அவர் நினைக்கிறாரோ என்னவோ? ஆனால் இந்த மோதலால், மக்கள் சாதி அடிப்படையில் கட்சிகளை தேடிச் செல்வார்கள் என்பது தான் கள நிலவரமாக இருக்கிறது. இது நிச்சயமாக திமுகவிற்கு பின்னடைவை தான் உண்டாக்கும். கடந்த 22 வருடங்களாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாத திராவிட முன்னேற்றக்கழகம் இனிமேல் நிச்சயமாக போட்டியிடக் கூடிய அளவிற்கு கூட பலம் இல்லாத நிலைதான் வரும் என்பது எதிர்காலத்தில் அவர்களுக்கு புரியும்.

சாதி ஒழிப்பு போராளிகள், முற்போக்கு வாதிகள் என அனைவருமே சிதம்பரம் தொகுதியின் வேட்பாளர் திருமாவளவனை ஆதரிப்பதால் தவறில்லை. ஆனால் அவர் பிரச்சாரத்திற்கு கூட திமுகவினால் வெளியே அனுமதிக்கப்படாமலே முடக்கப்பட்ட போது, அடக்குமுறை குறித்தோ, ஆனவோ போக்கு குறித்தோ மேலே குறிப்பிட்டவர்கள் வாய் திறக்கவில்லை. உண்மையிலே தலித் மக்களின் பிரதிநிதியாக திருமாவளவன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என அவர்கள் நினைத்திருந்தால் வைகோவிற்கு ஒரு ராஜ்யசபா ஒதுக்கியது போல திருமாவளவனுக்கும் திமுக ஒரு ராஜ்யசபாவினை ஒதுக்கியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் சிதம்பரம் தொகுதியில் மக்களிடையே பிரிவினைகள் உண்டாகியிருக்காது. எப்போதும் போல இணக்கமாகவே இருந்திருப்பார்கள்.

அரசியல் பிழைப்புக்காகவும், தங்களுடைய சுய நலனுக்காகவும் இணக்கமாக இருந்த இரு பிரிவு மக்களை இறுக்கமாக எதிரும் எதிரும் நிற்க வைத்த பெருமை எல்லாம் யாரை சாரும் என்பது உங்கள் சிந்தனைக்கே!.. வரும் காலங்களிலாவது இது போன்ற சம்பவங்கள் நடக்காமலும் அதனை கட்சிகளும், இயக்கங்களும் ஆதரிக்காமலும் இருக்க வேண்டும் என்பதே சிதம்பரம் தொகுதி மக்களின் மனநிலையாக உள்ளது. இக்கட்டுரையானது சிதம்பரம் தொகுதி மக்களின் இடையே பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponparappi issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->