ஐயப்பன் வரலாறு! பதிவு -2! - Seithipunal
Seithipunal


மகிஷியின் செயல்பாடுகள் :

தான் பெற்ற வரத்தினால் தேவர்களுக்கு பலவிதமான இன்னல்களை தோற்றுவிக்க தொடங்கினாள். பின்பு தனது சக்தியினை கொண்டு தவம் புரியும் முனிவர்களுக்கு பலவிதமான இன்னல்களை ஏற்படுத்தி அவர்களை அழிக்கவும் செய்தாள். என்னை அழிக்க எவரும் இல்லை, இனியும் இருக்க வாய்ப்பில்லை என்ற கர்வத்தால் பூமியில் உள்ள உயிரினங்களையும், தன் கண்ணில் பட்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் அழிக்க தொடங்கினாள்.

தேவேந்திரனை காண செல்லுதல் :

மகிஷியின் செயல்பாடுகளை எதிர்த்த தேவர்களையும், அழிக்கத் தொடங்கினாள். காலங்கள் செல்ல... செல்ல... மகிஷியின் சக்தியும், அவளால் உண்டாகும் அழிவும் அதிகரிக்க தொடங்கியது. பின்பு தேவர்கள் மற்றும் முனிவர்கள் என அனைவரும் தேவர்களின் தலைவரான இந்திரனை சந்தித்து மகிஷியால் நடைபெற்று கொண்டிருக்கும் அழிவுகளை எடுத்துக்கூறி தங்களை காக்க வேண்டி நின்றனர்.

தேவர்களின் வேந்தனான இந்திரன் அவர்களின் இன்னல்களை அறிந்து அவர்களின் இன்னல்களை போக்கும் பொருட்டு மகிஷிக்கு வரம் அளித்த பிரம்ம தேவரை காண சத்யலோகம் சென்று பிரம்ம தேவரை கண்டு, வணங்கி முனிவர்கள் மற்றும் பூவுலகில் வாழும் மக்கள் அடையும் இன்னல்களை எடுத்துக்கூறினார்.

பிரம்ம தேவரின் பதில் :

அதற்கு பிரம்ம தேவர் மக்கள், முனிவர்கள் மற்றும் தேவர்கள் என அனைவரும் அனுபவித்து வரும் துன்பங்களை களையக்கூடிய அவதார புத்திரன் கூடிய விரைவில் உருவாகி அனைவரின் இன்னல்களையும் களைவான் என்று கூறினார்.

பின்பு தேவர்களின் அரசன் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு பிரம்ம தேவர் கூறியதை எடுத்துரைத்தார். இருப்பினும் தேவர்களின் பணிகளும், முனிவர்களின் தவ வாழ்க்கையும் பலவித இன்னல்களும், இடர்களும் நிறைந்ததாக இருந்தன. 

மகிஷி என்ற அரக்கி தன்னுடைய வரத்தினால் கிடைத்த சக்தியை கொண்டு சகல சக்திகளையும் தனதாக்கி கொண்டாள். சூரியன், வாயுபகவான் என இயற்கையின் அனைத்து செயல்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்தி அவர்களின் செயல்பாடுகளை தனதாக்கி கொண்டாள். இயற்கையும் இவ்விதம் அரக்கியின் கைகளால் அகப்பட்டு பலவித இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருந்தது. தேவர்களின் சக்திகள் அரக்கியின் சக்திக்கு முன் செயல்படவில்லை. 

பஸ்மாசுரன் தவம் இயற்றுதல் :

பல காலங்களுக்கு முன்பே பஸ்மாசுரன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினார். நாட்கள்... காலங்கள்... என அனைத்தையும் கடந்து மனதை ஒருமுகப்படுத்தி சிவபெருமானை சிந்தையில் கொண்டு தவத்தினை தொடங்கினார்.

சிவபெருமான் காட்சி அளித்தல் :

பஸ்மாசுரனின் தவத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். சிவபெருமான் பஸ்மாசுரனை நோக்கி உன் தவத்தால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும், வேண்டும் வரத்தை கேட்டு பெறுவாயாக... என்றும் கூறினார்.

வரம் பெறுதல் :

அசுரனும் எப்போதும் போலவே தன்னை யாராலும் அழிக்க இயலாத அழிவில்லாத வாழ்க்கை வேண்டும் என்று வேண்டினான். அதற்கு சிவபெருமான் இயற்கை நியதிக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்களே... இதிலிருந்து விதிவிலக்கு பெற இயலாது. ஆகவே வேறு வரத்தினை கேட்பாயாக... என்று கூறினார். பின்னர் சிந்தித்த பஸ்மாசுரன் தான் யாருடைய சிரசில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண்டும் என்ற வரத்தினை அழிப்பீர்களா என்று வேண்டி நின்றான். சிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அவ்விதமே அளித்தார்.

சிவபெருமானையே பரிசித்தல் :

தான் வேண்டிய வரத்தினைப் பெற்ற அசுரன் அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து பெற்ற வரத்தின் வலிமையை அறிந்து கொள்ள தனக்கு வரம் அளித்த சிவபெருமானின் மீது பரிசோதிக்க முற்பட்டான். 

சிவபெருமான் அனைத்தும் அறிந்தவராயிற்றே. அதாவது தனது பக்தர்களின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவராயிற்றே. எனவேஇ வரம் அளித்த சிவபெருமான் அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். பின் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களில் இருந்து அவர்களை காக்கும் பொருட்டு தனது திருவிளையாடலை தொடங்கினார் சிவபெருமான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iyyappan history 2


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->