வட இந்தியர்கள் மத்தியில், தலை நிமிர்ந்த ஒரே தமிழன்..!! இவரை சமாளிக்க முடியாமல் வெள்ளையர்கள் செய்த வேலை.. - Seithipunal
Seithipunal


ஸ்ரீ வ.உ.சி அவர்கள் 1872 வருடம் பிறந்தவர்கள். அவர்கள் ஆங்கிலம் பயின்று சட்ட நிபுணத்துவம் பெற்று சரளமாய் வாதிக்கும் திறமையுடைய வக்கீல்

அன்னார் 23-ம் வயதில் இல்லறம் ஏற்றார். 1906-ம் வருடத்தில் கப்பலோட்ட அன்றைய ஆங்கிலேய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியாரோடு போட்டி போட புகழ்பெற்ற பண்டை நாளைக் கப்பல் திறனை புதிதாகப் புகுந்த வேட்கை கொண்டார்.

அக்காலத்தில் திலகரோடு தோளோடு தோள் நின்ற காரியம் சாதித்த சாதிப்பதற்கெனவே தன் வாழ்நாளைச் சேமித்த சிதம்பரம் பிள்ளையவர்கள் தென்னாட்டிற்கும் தேசத்திற்கும் ஆற்றிய தொண்டு பலவகைப்படும்.

அவற்றிள் குறிப்பாக 1906-ம் ஆண்டில் திருநெல்வேலியில் "தேசாபிமானம் சங்கம்" ஒன்று சிதம்பரம் பிள்ளையவர்களால் நிறுவப்பட்டது.

இச்சங்கம் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் கூட்டி சுதேசிப் பற்று அந்நிய சாமான் விலக்கு, தேசியக்கல்வி என்பவைகளைப் பற்றி பிரசங்கிக்க ஏதுவாக இருந்தது. அச்சமயத்தில் சுப்பிரமணிய சிவா அவர்கள் திருநெல்வேலி வந்தார்கள். இவர் சிறந்த தமிழறிஞர்
பழத்த தேச பக்தர்.

அக்காலத்தில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளாராக இருந்ததால் வேலை முடிந்ததும் மாலை நேரங்களில் தூத்துக்குடி கடற்கரையில் நடக்கும் பொதுக் கூட்டங்களுக்கு வந்து சிவாவின் பேச்சைக்கேட்பார்..

அக்காலத்தில் 1908-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதியை வடஇந்தியாவின் மற்றொரு தேசத் தலைவரான விபின் சந்திர பாலர் விடுதலை தினமாகக் கொண்டாட திருநெல்வேலி ஜில்லாவெங்கும் "தேசாபிமான சங்கத்தார்" தீவிர முயற்சி எடுத்துக் கொண்டனர்.

அந்தக் தினத்தைக் கொண்டாக்கூடாது என்ற நிலையில் மார்ச் 9-ம் தேதியன்று தூத்துகுடியில் ஊர்வலமாக பொதுக்கூட்டமோ நடத்தக்கூடாது என்று மாஜிஸ்திரேட் தடையுத்தரவு போட்டார்.

மாஜிஸ்திரேட்டு சிதம்பரம் பிள்ளையை நேரில் வரவழைத்து ஊர்வலத்திலோ பொதுக்கூட்டத்திலோ எவ்வித சம்பந்தமும் ஊக்கமும் இருக்ககூடாது என்று எச்சரித்தார். பிள்ளை அவர்கள் "எழுத்துமூலமாக உத்தரவு கொடுங்கள்" என்று கேட்டார். அவர் அம்மாதிரி ஒன்றும் கொடுக்கத் துணியவில்லை.

சிதம்பரம் பிள்ளையவர்கள் எவ்வித தேசிய நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

சிதம்பரம் பிள்ளையோ லாபத்திற்கென பொருள் குவிப்பதற்கென பொல்லாத நோக்குக் கொண்ட கம்பெனியின் பங்குதாரர்களில் ஒருவரா? அதற்கெனவா கம்பெனி ஸ்தாபிக்கப்பட்டது அல்ல!

வெள்ளையன் கொள்ளையடிக்கும் பணத்தை நிறுத்த வேண்டுமென்ற ஒரே நோக்குடன்தான் அது ஸ்தாபிக்கப்பட்டது.

ஆகையால் பிள்ளையவர்கள் இதற்குச் சற்றும் செவிசாய்க்காது அந்த மார்ச் மாதம் கூட்டத்தைக் கூட்டி வெகு அமைதியான முறையில் மிகவும் சிறப்பாகக் கூட்டத்தை நடத்தினார் குமுறிப் பேசினார். மக்களிடையே அரசியல் கொதிப்பை ஆக்குவித்தார் ஊக்குவித்தார்.

வண்ணார் துணி வெளுக்கமாட்டார். பலகாரக்கடைக்காரர் பலகாரம் தரமாட்டார். வண்டிக்காரர் வண்டியோட்டமாட்டார். இம்மாதிரி சம்பவங்கள் ஏகபோகமாக நடந்தன நடப்பவற்றை பார்த்தனர் அரசாங்கத்தார்.

சிதம்பரம் பிள்ளையைக் கைது செய்தாலொழிய காரியம் மிஞ்சிவிடும் என்று கண்டனர். கண்டதும் தூத்துக்குடியில் கைது செய்யப் பயந்து திருநெல்வேலி தன்னை வந்து சந்திக்கும்படி விஞ்ச் என்ற கலெக்டரவர்கள் சிதம்பரம் பிள்ளைக்கும் சிவாவுக்கும் உத்தரவு அனுப்பினார். இவர்கள் சென்றார்கள்.

இவர்கள் சென்றவுடன் திருநெல்வேலி ஜில்லாவை விட்டு உடனே வெளியேறச் சம்மதிக்க வேண்டும்மென்றும் அரசியல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை என்று ஜாமீன் தர வேண்டுமென்றும் கேட்டார்.

சிதம்பரம் பிள்ளையவர்கள் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதத்திற்குப் பின் கலெக்டர் ஒரே பிடிவாதமாக இருக்க கலெக்டரிடம் ,தான் எந்தவித நிபந்தனையிலும் கையெழுத்துப் போட முடியாதெனவும் தம்மை வேண்டுமானால் கைது செய்து கொள்ளாலாம் என்றார்.

அதன் பயனாய் சிதம்பரம் பிள்ளையவர்களும் சிவாவும் கைது செய்யப்பட்டார்கள் கைது செய்யப்பட்டா தகவல் மின்னல் வேகத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி முதலிய நகரங்களில் பரவியது.

அம்மாத்திரத்தில் ஜனங்கள் வெகுண்டார்கள்.  வீதயெங்கும் வெளியெங்கும் பெருங்கூட்டமும் குழப்பமும் அதிகரித்தது.

சர்க்கார் அதிகாரிகள் சமாளிக்க முடியாதெனப் பயந்து கலெக்டருக்கும் சூப்பிரிண்டெண்டுக்கும் தகவல் அனுப்ப மேற்படி இருவரும் கைத் துப்பாக்கியுடனும் விசேஷப் படையுடனும் விரைந்து வந்து தெருவில் நின்ற ஜனங்களைச் சின்னாபின்னமாகச் சுட்டனர்.

அக்குண்டுகளுக்கூ இரையாகி கோயில் பணி செய்து கொண்டிருந்த 17 வயதுப் பையனும் கடையைப் பூட்டிவிட்டு வெளியே போன மற்றொரு 18 வயது வாலிபனும் உயிர் துறந்தார்கள்.

அந்த பிரேதங்கள் காயமடைந்தவர்கள் எல்லாம் அப்புறப் படுத்தப்படாமல் மாலைவரை வீதியிலேயே அனாதைகள் போல் கிடத்தப்பட்டார்கள். அதை அப்புறப்படுத்தவோ காயமடைந்தவர்களுக்கு வேண்டிய சிகிச்சை புரியவோ வேண்டிய மனித புத்தி அன்றைய அதிகார வர்க்கமாகிய வெள்ளைய மனித மிருகங்களுக்கு இருக்கவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் சர்க்கார்  போலீஸ் படையை வரவழைத்து திருநெல்வேலி தூத்துக்குடி தச்சநல்லூர் முதலிய இடங்களுக்கு அனுப்பி தண்டவரி வசூலிக்க பிரகடனமும் செய்தார்கள்.

மேலும் 89 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அதில் ஒருவர் தவிர மற்றையோரெல்லாம் பற்பல தண்டனைக்குள்ளானார்கள். மற்றும் இத்தோடு வஞ்சம் தீர்த்தது போதாதென்று மார்ச் 12-ம் தேதி அரஸ்டை அதிகப்படுத்தவும் குற்றஞ்சாட்டவும் குறுகிய,நோக்கோடு,

1908-ம் வருடம் பிப்ரவரி 23 26 தேதிகளிலும் மேற்படி ஆண்டு மார்ச் 1,3 தேதிகளிலும் சர்காருக்கு விரோதமாக நிந்தனையாகப் பேசியதாக 124ஏ பிரிவுப்படியும் சுப்பிரமணிய சிவாவும் இடமும் உணவும் அளித்ததற்காக 153ஏ பிரிவின்படி சிதம்பரம் பிள்ளை அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தது.

சிதம்பரம் பிள்ளைக்காக தஞ்சை வக்கீல் ராமசாமி ஐயரவர்கள் ஆஜரானார்கள். விசாரணைக் காலத்தின் இடையில் கோர்ட்டார் தம் வக்கீலிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று பிள்ளையவர்கள் வழக்காட மறுத்துவிட்டார்.

மாஜிஸ்திரேட் விசாரணைக்குப் பின்பு வழக்கை அடிஷனல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றினர். 

தேசியத்தை நசுக்க அநீதியைப் பெருக்கியேனும் ஆட்சியை நீடிக்க அயாரது பாடுபடும் வெள்ளை வர்க்கம் அதன் பிரதிநிதியான பின்ஹே அரசாங்கத் துவேஷக் குற்றத்துக்காக பத்து வருடத் தீவாந்திர தண்டனையும் சிவாவிற்கு உடந்தையாயிருந்த குற்றத்திற்காக மற்றொரு

பத்து வருடத் தீவாந்திரத் தண்டனையும் இவை இரண்டையும் ஒன்றின்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்புவித்து,

பிள்ளை ஒரு பெரிய ராஜத் துரோகி அவருடைய எழும்புக்கூடு கூட ராஜ விசுவாசத்திற்கு விரோதமான தென்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்.

அக்கொடிய தண்டனையை அப்பீல் கோர்ட்டார் முதல் குற்றத்திற்கேற்பட்ட பத்து வருடத் தண்டனையை ஆறு வருடமாகவும் பின் தண்டனையை நான்கு வருடமாகவும் இரண்டையும் ஏக காலத்தில் அனுபவித்தால் போதுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

சிறைச்சாலையோ அன்றைக்கிருந்த கோரம் அளவிடற்படாதது. சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்தார்..

இன்றைக்குள்ள சிறைவாசமோ வங்கத்தின் வாலிபன் யதீந்திரநாத் தாஸ் 61 நாள் உண்ணாவிரதத்தின் பயனாய் அணுஅணுவாய்த் தன் சரீரரத்தை சித்ரவதை செய்து,

தேசத்திற்காக சிறை செல்லும் தியாகிகளுக்குத் தனிச்சலுகை வேண்டும் என்ற பிரார்த்தனை. அவ்வாலிபனின் பிரேதத்திற்குப் பின்னால் ஏ-பி-ஸி வகுப்புகளாக மாறியிருக்கிறது.

அவ்வாலிபனின் பிரேதத்தை சிறைச்சாலையின் வாயிலில் சென்று கையேந்தி வாங்கியது இன்றைய வங்கச் சிங்கம் நேதாஜி என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

விடுதலை ஆகி ,வந்த காலத்தில் வ.உ.சி அவர்களை வாவென்று வரவழைக்கவோ ஊர்வலம் நடத்தவோ படத் திறப்பு விழாச் செய்யவோ பட்டங்கள் வழங்கவோ எவரும் முன்வந்தாரா! அவரும் எதிர்பார்த்தாரா? இரண்டுமில்லை.

அன்னார் 1919-ம் வருடம் காங்கிரசில் காந்தியடிகளால் கொண்டு வரப்பட்ட அகிம்சை சத்தியம் என்ற ஒத்துழையாமைத் தீர்மானத்தை கல்கத்தா விசேஷ காங்கிசில் எதிர்ப்பதற்குகாக இங்கிருந்தே புறப்பட்டுச் சென்றார்.

அவர் வடக்கத்திய அரசியல் தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

அவர் ஒரு சமயம் அன்றைய தேசியவாதியும் இன்றைய மகரிஷியுமான அரவிந்தகோஷ் அவர்களால் "எனது பிள்ளையவர்கள் எங்கே?" என்று காங்கிரஸ் பந்தலில் கேட்ட காலத்தில் பக்கத்திலிருந்த வட இந்திய முக்கியஸ்தர்கள் "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று வினவினார்கள்

அப்பொழுது அவர் "தென்னிந்தியாவின் சிறந்த தேசியவாதியாகிய வ.உ.சிதம்பரம் பிள்ளையைத் தெரியாதா? என்று பதிலளித்தார். இன்று அந்த மாமனிதரின் நினைவு நாள்

இப்படியெல்லாம் பாடுபட்டு சுதந்திரம் வாங்கிதந்த வ.உ.சி பேரனது நிலை..?

மதுரையில் சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி கொண்டிருந்துள்ளார்

கைலி, அழுக்கு சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் தன் எதிரே
வந்தார். ஏன் முன்னாடியே வரக் கூடாதா? என்று சகாயம் அவர்கள் வினவ,

அதற்கு அவர் கூறியுள்ளார், அய்யா… நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான்.

இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார்.

அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என்று பரிதாபமாகச் கூறியுள்ளார்

உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தி  உள்ளார் சகாயம் அவர்கள்..

அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தார்..வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.

வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.

தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

history of VOC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->