மாறி கை வைத்து மீறிப்போகும் கட்டுப்பாடு... எல்லையில் சீறிப்பாயும் குண்டுகள்... இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் பெரிய அழிவை நோக்கி..? - Seithipunal
Seithipunal

சரியாக ஒரு வருடம் முன்னர், செப்டம்பர் மாத இறுதியில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், துல்லிய தாக்குதல் (surgical strike) நடத்தி. தீவிரவாதிகளின் முகாம்களை அழித்ததாக அறிவித்தது. அந்த அறிவிப்பு சரியா அல்லது இந்திய அரசு பொய் சொன்னதா என்கிற விவாதத்திற்குள் செல்லாமல் அதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் விசயங்களை கவனப்படுத்தலாம். பாகிஸ்தான் நாட்டிடம் 140 அணு குண்டுகள் இருப்பதாக சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு அணு குண்டு கூட, பூமியில் போடுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் 140 குண்டுகளை ஏன் பாகிஸ்தான் தயாரித்து வைத்துள்ளது என்கிற கேள்வி எழாமல் இல்லை. இந்திய திருநாடும் அழிவு தரக்கூடிய தொழில்நுட்பங்களை செய்வதில் எந்த விதத்திலும் சளைத்தது அல்ல, இந்தியாவிடமும் 130 அணு குண்டுகள் உள்ளன. உடனே தேசப்பற்றாளர்கள் "பாருங்கள் பாகிஸ்தானை விட நம்மிடம் 10 அணு குண்டுகள் குறைவாக உள்ளன. மேலும் பல அணு குண்டுகளை செய்ய வேண்டும்" என்று கூக்குரலிட்டால், மேலும் பலநூறுக்கணக்கான அணுகுண்டுகளை செய்வதற்கு தேவையான புளுடோனியம் இந்தியாவிடம் உள்ளது என்பது தான் பதில். இதில் இப்போது என்ன சிக்கல் என்றால், அணு குண்டுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும், வீட்டு மாடியில் வடகம் காயப்போடுவது போன்றது கிடையாது அணு குண்டுகளை பாதுகாப்பது. இதை மனதில் கொண்டு பாகிஸ்தான், அணுகுண்டுகளை பாதுகாக்க சுரங்கங்கள் அமைக்கின்றது. நல்லதுதானே என்கிற எண்ணம் உங்களுக்கு வந்தால், அங்கே தான் பிரச்சனை. இந்த சுரங்கங்களை பாகிஸ்தான் டெல்லியில் இருந்து 750 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மியன்வலி என்கிற இடத்தில அமைக்கிறது. அமிர்ஸ்டர் நகரில் இருந்து 350கிலோமீட்டர் தூரம் தான் இந்த இடம். பத்தடி அகலமும், பத்தடி உயரமும் உள்ள இந்த சுரங்கங்களை பெரிய சாலைகளை கொண்டு இணைத்துள்ளது. அணு ஆயுதங்களை ஏவும் ஏவுகணைகளை தாங்கி செல்லும் வாகனங்கள் சுலபமாக செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைந்துள்ளன. ஓவ்வொரு சுரங்கத்திற்கென தனி தனியாக நுழைவு வாயில்களும், வெளியேறும் வாயில்களும் உள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் 12 முதல் 24 குண்டுகள் வரை பாதுகாத்துக்கொள்ளலாம். இதில் என்ன பிரச்சனை என்றால், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு சரிந்துவரும் தன்னுடைய செல்வாக்கை மீட்டெடுக்க "துல்லிய தாக்குதல்" என்ற பெயரில் எல்லையில் நடத்தி "தேசப்பற்றை" ஊற்றி வளர்த்தெடுக்க முடிவு செய்தால், என்னவாகும் என்று நினைத்து பாருங்கள். கட்டுப்பாடில்லாமல் புறப்பட்டு சீறிப்பாயும் குண்டுகள், இந்திய எல்லைகளின் மிகஅருகில் உள்ள இந்த அணுகுண்டு கிடங்குகள் மீது விழுந்தால், நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. ஒரு வேளை அப்படி நடந்தால், இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் பெரிய அழிவை சந்திக்கும். நாம் எல்லோரும் சேர்ந்து இந்திய அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கை இது தான், இந்தியர்களான எங்களிடம் நிறையவே தேசப்பற்று உள்ளது. அதனால் எங்களுக்கு மேலும் தேசப்பற்றை ஊட்ட வேண்டாம், பாகிஸ்தானுடன் துல்லிய தாக்குதலோ, அல்லது சிறிய அளவிலான போர் என்று எதுவுமே தேவையில்லை. அப்படி நடந்தால் ஓட்டு மொத்த உலகமும் அழிவை சந்திக்க நேரும். செய்தி மூலம்: பூவுலகின் நண்பர்கள்
Advertisement


Get Newsletter

Seithipunal